டிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி, வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் சில ஃபோன்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப்-ம் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு செயல்களுக்கு வாட்ஸ்அப் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் சில ஃபோன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பிளாக்பெரி ஓஎஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் ஃபோன் 8.0 வெர்ஷன் அதற்கும் கீழ் உள்ள மாடல்களில் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நோக்கியா எஸ்40 இயங்குதள மொபைலிலும் டிசம்பர் 2018 ஆண்டிற்கு பிறகு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் முன்னதாகவே அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10 மற்றும் விண்டோஸ் ஃபோன் 8.0 வெர்ஷன் அதற்கும் கீழ் உள்ள மாடல்களில் இனிமேல் தங்களால் வாட்ஸ்அப் சேவையை வழங்க முடியாது என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள புதிய அப்டேட் மொபைல்களை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் குறித்தும் முன்னதாகவே அறிவித்திருந்ததாகவும், எனவே அறிவிப்பின் படி டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்றும் தெரிவித்துள்ளது.