பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக, சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் ஐந்து லட்சம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இதில் உள்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் என்ற நிறுவனத்தின் மூலம் 5 கோடி பேரின் தகவல்களை திருடியது உறுதிசெய்யப்பட்டது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த திருட்டு காரணமாக ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இது தொடர்பாக அமெரிக்காவின் செனட் சபையில் ஆஜராகி நேரில் விளக்கமும் அளித்தார்.
இந்நிலையில் இந்த தகவல் திருட்டு விவகாரத்தில் இங்கிலாந்து நாட்டின் தகவல் கண்காணிப்பு (Information Commissioner's Office) அமைப்பு அலுவலகம், விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து, பேஸ்புக் நிறுவனத்துக்கு 5 லட்சம் பவுண்ட் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, சுமார் ரூ.4.72 கோடி.
அரசியல் நோக்கங்களுக்காக பேஸ்புக் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்பட்டன என்பதை தகவல் கண்காணிப்பு அமைப்பு இன்னும் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.