வடிவமைப்பு, சிறப்பம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி டெஸ்க்டாப் வெர்ஷனுக்கு ட்விட்டர் அப்டேட் கொடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் ஆகியவை முக்கிய இடத்தில் உள்ளன. சமூக வலைதளங்கள் பயனாளர்களை கவர்வதற்காகவும் பயன்படுத்த எளிதாகவும் அடிக்கடி அப்டேட் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டர் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கு அப்டேட் கொடுத்துள்ளது. வடிவமைப்பையும், சிறப்பம்சங்களையும் மாற்றியுள்ளது. முக்கிய ட்விட்களை புக் மார்க் செய்துகொள்ளும் வசதி, பயன்படுத்தும் போது கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க டார்க் மோட் வசதி, லைட்ஸ் அவுட் வசதி, ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. எக்ஸ்புளொர் (Explore ) மூலம் ட்ரெண்டிங்கை எளிதாக அறியும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பு கவர் புகைப்படங்களுக்கு ஏற்ப வண்ணங்கள் மாறுவது போல இருந்தது. ஆனால் தற்போது மஞ்சள், சிவப்பு, ஊதா, ஆரஞ்ச், பச்சை என வண்ணங்களை மாற்றும் வசதியும் உள்ளது.
இதேபோல் கனடாவில் மட்டும் ட்விட்டர் ரிப்ளையை மறைக்கும் வசதியை சோதனையாக கொண்டு வந்துள்ளது. தேவையற்ற ரிப்ளையை பயனாளர்கள் லாக் செய்து கொள்ளலாம். அதே போல் ரிப்ளையை படிக்க விரும்புபவர்கள் அன்லாக் செய்து படிக்கவும் வசதி உள்ளது.
பயனாளர்கள் மற்றும் பின் தொடர்பவர்கள் இருவருக்கும் சமவாய்ப்பை கொடுக்கும் விதமாக இது இருக்கும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இது தற்போது சோதனைதான் என்றும் வரவேற்பைத் தொடர்ந்தே அதிகாரப்பூர்வமாக அப்டேட் செய்யப்படும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.