இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, மே 1ஆம் தேதியான நேற்று முதல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றும், அதற்காக செயற்கை நுண்ணறிவு ஸ்பேம் பில்டர்ஸ்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதன் மூலம் TRAI, ஸ்பேமர்களின் மோசடியைத் தடுக்க விரும்புகிறது.
இதுமட்டுமல்லாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அழைப்பவரின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் காண்பிக்கும் "கால் ஐடி" என்ற அம்சத்தை, விரைவில் அறிமுகப்படுத்த TRAI பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே AI-ஃபில்டர்ஸ் சேவையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் டிஜிட்டல் கொள்ளை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்பேம் அழைப்புகளின் பேரில் முதியவர்கள் மட்டுமல்லாமல், பல படித்த இளைஞர்களும் பணத்தை இழந்து வருகின்றனர். இந்த மோசடியானது குறுஞ்செய்தியில் அனுப்பப்படும் ஸ்பேம் மெசேஜ் லிங்க்குகளை ஓபன் செய்வதாலும், நம்பகத்தன்மை கொண்ட ஸ்பேம்-கால் பேச்சுவார்த்தை மூலமாகவும் தான் தொடர்ந்து நடந்து வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்வியலில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வலைதளங்களில் பயனாளர்கள் தேடும் சர்ச்களை வைத்து மோசடிகள் நடைபெற்றுவருகிறது. அதற்கும் மேல் சொல்லவேண்டுமானால், இப்போதெல்லாம் மனதில் நினைத்தது கூட வலைதளங்களில் வருதே, ஹேய் எப்புட்றா என்பது போலான விசயங்களும் அரங்கேறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலின் அடிப்படையில், மக்களின் தேவைக்கேற்ப மோசடிகள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் தான் இதனை தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் மாதமே ஸ்பேம் ஃபில்டர்களை பயன்படுத்த TRAI கேட்டுக்கொண்டது. பலகட்ட பரிசீலனைக்கு பிறகு மே1ஆம் தேதிமுதல் இந்த பயன்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்பவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க, AI ஃபில்டர்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும், போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தும். இந்த நடைமுறையை மேலும் வலுப்படுத்த, போன்-கால் அழைப்பவரின் புகைப்படம் மற்றும் பெயரைக் டிஸ்பிளேவில் காமிக்கும் ”கால் ஐடி” அம்சத்தையும் செயல்படுத்த TRAI திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் போன்ற சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஏற்கனவே AI-ஸ்பேம் ஃபில்டரை செயல்படுத்திவருவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஏர்டெல், NVIDIA-உடன் இணைந்து AI அடிப்படையிலான தீர்வை எட்டியுள்ளதாகவும், இது ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்தும் என்று தெரிவித்தது. இவர்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும், இந்த புதிய அம்சத்தை விரைவில் செயல்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி, ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், TRUECALLER-ம் இணைந்து செயல்படவிருப்பதாக தெரிகிறது.
அதன்படி மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பில்டர் செய்வதிலும், அழைப்பவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளிக்கொண்டுவருவதிலும் TRUECALLER முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை TRUECALLER இணைவது உறுதியானால், “கால் ஐடி” வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.