2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக்குழு.
ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபாடிடிஸ் சி என்ற வைரஸை கண்டுபிடித்ததற்காக இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஒரு ஆண்டில் சுமார் 4 லட்சம் பேர் வரை உயிரிழக்க காரணமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.