மொபைல் போன்களுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து விடுபட மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். இளைஞர்கள் உட்பட பெரும்பாலானோர் கைகளை ஆக்கிரமித்துள்ளது இந்த ஸ்மார்ட் போன். குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா, யுடியூப் போன்றவற்றில் இளைஞர்கள் தங்களையும் மறந்து மூழ்கிவிடுகிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் செல்போன் இல்லாமல் ஒருநொடி கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஸ்மார்ட் போன் சிறிது நேரம் இல்லாவிட்டால் இளைஞர்களுக்கு ஏதையோ இழந்தது போலாகிவிடுகிறது. இப்படி இளைஞர்கள் மட்டும் அடிக்ட் ஆகியிருந்த காலம் போயி, தற்போது பல்வேறு வயதினரும் ஸ்மார்ட் போன்களில் மெய்மறந்து காலம் கழிக்கிறார்கள். ஸ்மார்ட் போன்கள் நிறைய நேரங்களில் சரியாக பயன்பட்டாலும், தவறான விஷயங்களுக்கும் காரணமாக உள்ளதை செய்திகளில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி உங்களை போன் போதையிலிருந்து மீட்கும் என்று கூறப்படுகிறது. DIGITAL DETOX BY SHUT CLINIC என்ற பெயரிலான இந்தச் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. இதில் ஒரு முறை பதிவு செய்துவிட்டால் அன்றாட மொபைல் பயன்பாட்டை ஆய்வு செய்து அதை குறைத்துக்கொள்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். மேலும் தூக்க குறைபாடு, கண் எரிச்சல், தனிமை, பொழுதுபோகாமை போன்ற தகவல்களையும் இந்தச் செயலி பயனாளிகளிடம் இருந்து கேட்டுப் பெற்று அதற்கேற்ப ஆலோசனைகளை தருகிறது.
மொபைல் போனுக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள் 240 பேர் இந்தச் செயலியை பயன்படுத்தி அதில் 75 சதவிகிதம் பலன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சாதனங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி பலன் பெறுவது தொடர்பான சிறப்பு பிரிவை ஷட் என்ற பெயரில் பெங்களூரில் நிம்ஹான்ஸ் மருத்துவமனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது