செய்தியாளர்: கார்த்திகா செல்வன்
ப்ளூ மூன்... சூப்பர் மூன்... பிக் மூன்... பிங்க் மூன்... இந்த பட்டியல்ல இப்போ சேர்ந்திருக்கு டபுள் மூன் (Double Moon)... என்னது பூமிக்கு 2ஆவது நிலவா? அப்போ முதல் நிலவு என்ன ஆகும்? இப்படி ஒரு நிகழ்வால், பூமிக்கு ஆபத்தா? இப்படி பல கேள்விகளோட சமூக வலைத்தளங்களில் சிலர் உங்களை குழப்பலாம். இது எதுக்குமே கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதே உண்மை. ஏன் என பார்க்கலாம்...
ஏன் அப்படினா, பூமி எப்பவுமே தனக்கு அருகில் சுற்றி வரும் விண்கற்கள், சிறுகோள்களை தனது சுற்றுவட்டப்பாதைக்குள் ஈர்த்து, தற்காலிக சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம். அப்படிதான் அடுத்த 2 மாதங்களுக்கு 2024 பி.டி.5 என்ற சிறுகோள் பூமிக்கு அருகே ஈர்க்கப்பட்டு, 2ஆவது நிலவாக வலம்வர போகிறது. இந்த சிறுகோளை கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா கண்டறிந்தது. இந்த சிறுகல் அர்ஜூனா விண்கல் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் நீளம் 10 மீட்டர். பூமிக்கு நான்கரை பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் நிலவை போல இல்லாமல், இந்த 2ஆவது நிலா மிகவும் சிறிதாகவே இருக்கும்.
பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் இந்த 2ஆவது நிலா நவம்பர் 25ஆம் தேதி வெளியேறிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 1981, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் கூட பூமிக்கு 2ஆவது நிலவுகள் வந்துள்ளன. தற்போது சுற்றிவரும் 2024 பி.டி.5 மீண்டும் 2051ஆம் ஆண்டு பூமிக்கு அருகே வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அடடா மொட்டமாடியில ஒற்றை நிலவை ரசிப்பதே ரம்மியமா இருக்குமே, அடிச்சது ஜாக்பாட் 2 நிலவையும் ரசிச்சு மகிழலாம்னு நீங்க மனசுல திட்டம் போடுறது எங்களுக்கு கேக்குது. ஆனா, அதுல என்ன சோகம்னு பார்த்த இந்த 2024 பி.டி.5 நிலவு ரொம்ப சின்னது அப்படின்றதால வெறும் கண்களால பார்க்க முடியாதாம்..
தொலைநோக்கி மூலமாவோ, கோளரங்கங்கள் மூலமாவோதான் பார்க்க முடியுமாம்.. பூமியோட புதிய விருந்தாளிய உங்க பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த இப்போவே தயாராகுங்க...