அறிவோம் அறிவியல் 9 | சனியின் வடதுருவத்தில் அறுகோண வடிவில் சுழலும் காற்று...!

இன்று அறிவோம் அறிவியலில், சூரியனிலிருந்து ஆறாவது கிரகமான சனி கிரகத்தைப் பற்றி பார்க்கலாம்.
சனி கிரகம்
சனி கிரகம்புதிய தலைமுறை
Published on

இன்று அறிவோம் அறிவியலில், சூரியனிலிருந்து ஆறாவது கிரகமான சனி கிரகத்தைப் பற்றி பார்க்கலாம். சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகம் இது. வியாழன் போன்று இதுவும் முழுவதுமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தால் நிரம்பிய கோள். இதன் மையத்தில் இரும்பு மற்றும் நிக்கல் போன்ற உலோகங்களான அடர்த்தியான பாறைப் பொருட்கள் இருக்கும்.

பூமியிலிருந்து பார்த்தால் சனி கிரகம் நன்கு தெரியும். அதுவும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கும் பொழுது அதனை சுற்றி இருக்கும் வளையங்களுடன் தெரியும்.

பூமியைவிட சனி கிரகம் சுமார் 9 மடங்கு பெரியது. இதன் அளவு சுமார் 1,20,500 கிலோமீட்டர் விட்டம். இவ்வளவு பெரிய கிரகமாச்சே.... அங்கு சென்று வாழலாம் என்று நினைத்தால் அதுதான் முடியாது. அட்லீஸ்ட் போய் பார்த்துவிட்டு வரலாம் என்றால்கூட முடியவே முடியாது.

இதுபோன்ற கிரகங்களை நாம் படத்தில் மட்டும் பார்த்து திருப்திக்கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் இதற்குள் இருக்கும் வாயுக்களால் ஏற்படும் வெப்பநிலை அழுத்தம் போன்றவை நம் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல... உதாரணத்திற்கு பூமியில் இருக்கும் காற்றின் விகிதத்தில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலே நமக்கு உடல் உபாதை வந்துவிடுகிறது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தால் நிரம்பி இருக்கும் ஒரு கிரகத்தில் வாழதான் முடியுமா? கனவு வேண்டுமென்றால் வரலாம்...!

சனி கிரகம்
கடைசிநேர திக்திக்: நல்வாய்ப்பாக கண்டறியப்பட்ட கோளாறு; சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் எப்போது?

சூரியனிலிருந்து இதன் தூரம்:

சூரியனில் இருந்து சனி 9.5 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது.

சுற்றுப்பாதை மற்றும் சுழற்சி

பூமியில் எப்படி ஒரு நாள் என்பது 24 மணி நேரமோ அதே போல் சனியில் ஒரு நாள் என்பது வெறும் 10.7 மணி நேரம் மட்டுமே. காலையில் எழுந்து காலைக் கடன்களை முடிப்பதற்குள் பொழுது முடிந்துவிடும்... நம்மில் சிலர் “எனக்கு 24 மணி நேரம் பத்தலை” என்பார்கள்... அவர்கள் சனியை நினைத்து திருப்திக்கொள்ளுங்கள்!

இத்தனை வேகமாக சுற்றும் சனியானது சூரியனை சுற்றிவர 10,756 நாட்களை எடுத்துக்கொள்கிறது. நினைத்து பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா? சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் மெதுவாக சுற்றுகிறது. ஆனால் தொலைவில் இருக்கும் சனியும் வியாழன் போன்ற பெரிய கிரகங்கள் வேகமாக சுற்றுகின்றன. மேலும் இந்த கிரகம் பூமியைப்போன்று சாய்ந்த நிலையில் 26.73 டிகிரியில் சூரியனை சுற்றி வருகிறது.

நிலவுகள்

சனிக்கோள்களின் சுற்றுப்பாதையில் 146 நிலவுகள் உள்ளன என்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில் உறுதி செய்தனர். ஆக நிமிர்ந்து பார்த்தால் 146 நிலவு தெரியும்... அப்போ இருட்டே இருக்காதா என்றால், இருக்கும்... சூரியனின் தூரம் அதிகம் என்பதால் சூரியனின் வெப்பமும் ஒளியும் இங்கு குறைவாக இருக்கும். ஆகையால் நிலவு தெரியும்.

இந்த நிலவு ஒவ்வொன்றும் ஒவ்வொரு அமைப்பை பெற்றுள்ளது. சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான டைட்டன் நிலவு பனியால் ஆனது என்கின்றனர். இன்னொரு நிலவான ஃபோப் நிலவானது அதிக பள்ளத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பலவகைகளில் வாயுக்களால் நிரம்பிய, பனிகளால் மூடப்பட்ட பலவிதமான நிலவு சனி கிரகத்திற்கு உண்டு.

மோதிரங்கள் (Rings)

மோதிரங்கள் என்றவுடன், நம் விரலில் உள்ள மோதிரம் நினைவுக்கு வந்தால் நாங்க பொறுப்பல்ல... இது அந்த மோதிரமும் இல்லை. சனி கிரகத்தை சுற்றிய வளையம்தான் மோதிரம் எனப்படுகிறது. இந்த வளையமானது வால்மீன்கள், சிறுகோள்கள் போன்றவற்றால் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது சனியின் மீது மோதவரும் சிறு கோள்கள் சனியை அடைவதற்கு முன்பாக சனியின் சக்திவாய்ந்த ஈர்ப்பு விசையால் அவை ஈர்க்கப்பட்டு,உடைந்து அவை மீது பனி, தூசுகள் படிந்து மோதிரங்களாக உருமாறி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வளையமானது சிறியது பெரியது என்று பல வளையங்களை கொண்டிருக்கிறது.

இந்த வளையங்களை விஞ்ஞானிகள் A, B, C, D, E, F, G என்று பிரித்து பெயரிட்டுள்ளனர். இந்த வளையத்தின் தூரமானது 2,82,000 கிலோ மீட்டர் வரை நீண்டு இருக்கிறது என்கிறார்கள்.

A மற்றும் B ஐப் பிரிக்கும் காசினி பிரிவு என்று அழைக்கப்படும் 2,920 மைல்கள் (4,700 கிலோமீட்டர்கள்) அகலம் கொண்ட இடைவெளியைத் தவிர்த்து, ஒப்பீட்டளவில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக உள்ளன. முக்கிய வளையங்கள் A, B, மற்றும் C. மோதிரங்கள் D, E, F மற்றும் G ஆகியவை மங்கலானவை மற்றும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

சனியில் தொடங்கி வெளிப்புறமாக நகரும் போது D வளையம், C வளையம், B வளையம், காசினி பிரிவு, A வளையம், F வளையம், G வளையம், இறுதியாக E வளையம். வெகு தொலைவில், சனியின் நிலவான ஃபோபின் சுற்றுப்பாதையில் மிகவும் மங்கலான ஃபோப் வளையம் உள்ளது.

வளிமண்டலம்

சனி கிரகத்தின் மேலடுக்கு மங்கலான கோடுகள், ஜெட் ஸ்ட்ரீம்கள் மற்றும் புயல்கள் போன்ற மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இந்த கிரகம் மஞ்சள், பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் பல்வேறு நிறங்களைக் கொண்டுள்ளது.

கிரகத்தினுள் காற்று வினாடிக்கு சுமார் 500 மீட்டர் வேகத்தில் வீசலாம் என்கிறார்கள். இதனால் அங்கு காற்றானது அழுத்தம் கொண்டு திரவமாக இருக்கிறது என்கிறார்கள்.

சனியின் வட துருவ வளிமண்டலமானது அறுகோண வடிவத்தில் காற்று சுழன்றுக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முதன் முதலில் இந்த வடிவத்தை வாயேஜர் I விண்கலம் முதலில் படம் எடுத்து அனுப்பியது அதன்பிறகு காசினி விண்கலத்தால் மிகவும் நெருக்கமாக கவனிக்கப்பட்டது.

சுமார் 20,000 மைல்கள் (30,000 கிலோமீட்டர்கள்) குறுக்கே பரவி, அறுகோணமானது, மையத்தில் ஒரு பெரிய சுழலும் புயலுடன் மணிக்கு 200-மைல் காற்றின் (மணிக்கு சுமார் 322 கிலோமீட்டர்) அலை அலையான ஜெட் ஸ்ட்ரீம் போல காட்சி தருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் இது போன்ற வானிலை அம்சம் இல்லை.

அறுகோணத்தில் காற்றின் வேகம்
அறுகோணத்தில் காற்றின் வேகம்

காந்த மண்டலம்

சனியின் காந்தப்புலம் வியாழனின் காந்தப்புலத்தை விட சிறியது. ஆனால் பூமியை விட 578 மடங்கு சக்தி வாய்ந்தது. இதிலும் துருவ ஒளி (Arora) தோன்றுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com