ஹேக்கர்களிடம் இருந்து இணையதள பக்கங்களை பாதுகாக்கும் வழிமுறையை கண்டுபிடித்த மன்னார்குடி மாணவனை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மன்னார்குடி சிங்காரவேல் உடையார் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வரும் இவருடைய மகன் பிரகதீஸ். இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே இணையதளம் குறித்தும் அது இயங்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
கணினி குறித்த அடிப்படை கல்வி கற்றிருந்த பிரகதீஸ், இணையதளம் கணக்குகள் இயங்கும் விதம் அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் சம்பந்தமாக கற்றுக் கொண்டு வந்துள்ளார். மேலும் தொடர்ந்து இணையதளம் மூலமாகவே அது குறித்த அதிகப்படியான விவரங்களையும் கற்றறிந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஹேக்கர்கள் இணையதள பக்கங்களில் ஊடுருவி தகவல்களை திருடும்போக்கு அதிகரித்துள்ளதை அறிந்த அவர், இணையதள பக்கங்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். அதில் சில வழிமுறைகளை கண்டுபிடித்த பிரகதீஸ், அதற்கு செயல்வடிவம் கொடுக்க ஆரம்பித்தார்.
இந்த செயல் வடிவ முறையை உலகளாவிய அமைப்பு, உலக அங்கீகாரம் அளித்து சான்று மற்றும் பதக்கத்தை வழங்கியுள்ளது. இதையடுத்து தெலங்கானா போலீஸ் மற்றும் பல நிறுவனங்களுக்கு இணையதள பக்கங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை அளித்துள்ளார்.
தற்போது இவர் இது சம்பந்தமான சேவைகளை அளிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி பல நிறுவனங்களுக்கு சேவை அளித்து வருகிறார். இவரிடம் 20க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மன்னார்குடியை சேர்ந்த சாதாரண தொழிலாளியின் மகன் கணினி மற்றும் இணையதளம் குறித்த மிகப்பெரிய சாதனை செய்துள்ளது இப்பகுதி மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதனையடுத்து நேற்று மன்னார்குடி காவல் நிலையத்திற்கு வருகை தந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, மாணவர் பிரகதீஷின் சாதனை அறிந்து அவரை நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். பிரகதீஷின் பெற்றோர்கள் மற்றும் பலர் இருந்தனர்.