ஸ்மார்ட்போன் மொபைல்களின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகப்படியான பணம் இருப்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமே என குறைந்த வட்டத்தில் இருந்த ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு தற்போது அனைவரது கைகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மவுசு குறைவதாக இருந்தாலும், AI முதலிய புதுப்புது அப்டேட்களால் மொபைல் போன்களின் மவுசு மட்டும் இன்னும் குறையாமலே இருந்துவருகிறது.
அந்தவகையில் 2024-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் சந்தையானது ஆண்டுக்கு ஆண்டு 6 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சியானது AI- இயங்கும் சாதனங்களின் விற்பனையால் உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறை கண்ட மிக உயர்ந்த வளர்ச்சி எனவும் Counterpoint Research தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சிக்கு இருமடங்கு வளர்ச்சியைக் கொடுத்துள்ள ஐரோப்பா மற்றும் லாட்டின் அமெரிக்கா போன்ற சந்தைகள் பெரிதும் பங்களித்துள்ளன. வளர்ச்சியில் 20 சதவீத சந்தைப் பங்குடன் சாம்சங் முதலிடத்திலும், 16 சதவீத சந்தைப் பங்கைக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், Xiaomi, Vivo மற்றும் Oppo முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.
ஆப்பிள் மற்றும் சாம்சங் இரண்டும் முந்தைய ஆண்டுகளில் இருந்து தங்கள் நிலைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்த அதே நேரத்தில், Xiaomi மற்றும் Vivo போன்ற பிராண்டுகள் தங்கள் சந்தைப் பங்கை உயர்த்த மேலும் விரிவுபடுத்தி வருகின்றன. மொத்தத்தில் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியானது நான்கு சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக வளர்ச்சி இருந்தபோதிலும், Huawei, HONOR, Motorola மற்றும் Transsion குழு பிராண்டுகளின் தனிப்பட்ட போட்டியின் காரணமாக பிராண்டுகளின் சந்தைப் பங்கு குறைந்துள்ளது. முதல் பத்து பிராண்டுகள் சந்தையின் 90 சதவீதத்தை கைப்பற்றியுள்ள நிலையில், சீனாவில் Huawei-ன் மறுபிரவேசம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. உடன் HONOR மற்றும் TECNO போன்ற பிராண்டுகளும் சந்தைகளில் வேகத்தை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
Counterpoint படி, இந்த வளர்ச்சி தொழில்துறைக்கு ஒரு நல்ல செய்தி என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் 2023-ம் ஆண்டை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் விற்பனையானது பத்தாண்டுகளில் மிகக் குறைவாக இருந்ததாகவும், தற்போது எழுச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.