துபாய் காவல்துறையில் குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் வகையிலான பேஷியல் ரெகாக்னிஷன் (facial recognition) தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி ரோபோ கார்கள் இணைக்கப்பட உள்ளது.
மேலும், இந்த கார்களுக்கு துணையாக சிறிய அளவிலான ட்ரோன்களும் துபாய் தெருக்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளன. உலகின் அதிவேக கார்களைக் கொண்ட துபாய் காவல்துறை கண்காணிப்புப் பணியை திறம்பட செயல்படுத்த இந்தவகை கார்கள் பயன்படும் என்று கூறுகிறார்கள். ஓ-ஆர் 3 (O-R3) என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ கார்கள், இந்தாண்டு இறுதிக்குள் துபாய் காவல்துறையில் இணைக்கப்பட உள்ளது. இந்த ரோபோ கார்களில் வெப்பம் அதிகமுள்ள சூழலிலும் படம் பிடிக்கும் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் வாகனங்களின் நம்பர் ப்ளேட்கள் மூலம் வாகன உரிமையாளர்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ரிமோட் மூலம் இயக்கப்படும் ரோபோ கார்கள் சாலைகளில் அதிவேகமாக செல்லாது, வேகமாக செல்லும் வாகனங்களை அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ கார்களை சிங்கப்பூரைச் சேர்ந்த ஓடிஎஸ்ஏடபிள்யூ டிஜிட்டல் (OTSAW Digital) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.