டெலிகிராம் செயலியின் நிறுவனரான பாவெல் துரோவ், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் போர்கெட் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறார்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து போராடுவதற்காக அமைக்கப்பட்ட France's Ofmin நிறுவனம் துரோவுக்கு எதிரான கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
ஏனெனில், டெலிகிராமில் கன்டெண்ட் மாடரேட்டர் இல்லாதது, அந்த செயலியின் வாயிலாக குற்றச்செயல்கள் எவ்வித தடையுமின்றி நடைபெற வழிவகுத்ததாக பிரான்ஸ் காவல்துறையினர் கருதுகின்றனர். அந்த குற்றச் செயல்களை தடுக்க துரோவ், போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் வரை இருக்கலாம் என்பதால், இந்த செயலி தவறான தகவல்கள் வேகமாக பரவுவதை எளிதாக்குகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணைக்கு துரோவ் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் குற்றஞ்சாட்டினர். பாவெல் துரோவுக்கு ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துரோவ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது கடுமையான எதிர்வினையை பதிவு செய்துள்ளது. பிரான்ஸ் சர்வாதிகாரா நாடாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
டெலிகிராம் செயலி ஏறத்தாழ 950 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் மிகுந்த செல்வாக்கினை உடைய செயலியாக டெலிகிராம் உள்ளது. ஏனெனில், பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை வெளியிடுவது தொடர்பாக விமர்சிக்கப்படும் அமெரிக்க செயலிகளுக்கு மாற்றாக டெலிகிராம் பயன்படுத்தப்படுகிறது. தனது பயனர்களின் தரவுகளை வெளியிடக்கூடாது என்பதில் டெலிகிராம் உறுதியாக இருக்கிறது என நம்பப்படுவதால், மேலை நாடுகளில் அதிகமாக உபயோகிக்கப்படும் செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் உள்ளது.
39 வயதான பாவெல் துரோவ் ரஷ்யாவைச் சேர்ந்தவர், 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தனது சகோதரருடன் இணைந்து டெலிகிராம் செயலியை உருவாக்கினார். 2014 ஆம் ஆண்டு அவருக்கு சொந்தமான VKontakte சமூக ஊடக தளம் தொடர்பாக, ரஷ்ய அரசு பல்வேறு கோரிக்கைகளை வைத்தது. அதற்கு இணங்க மறுத்து துரோவ் ரஷ்யாவில் இருந்து வெளியேறினார்.
தற்போது துபாயில் வசிக்கும் துரோவ் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் அவர் குடியேறுவதற்கு முன், பெர்லின், லண்டன், சிங்கப்பூர் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் கூட குடியேறுவதற்கு முயற்சித்துள்ளார். தற்போது அவரது சொத்து மதிப்பு என்பது 15.5 பில்லியன் டாலர்கள் என போர்ப்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.