ட்ரபிஸ்ட்1 என்ற ஒரு விண்மீனைப்பற்றி இன்று நாம் பார்க்கப்போகிறோம்...
ட்ரபிஸ்ட்1 என்ற விண்மீன் குடும்பமும் சூரிய குடும்பத்தை போன்றது. சூரியனைச்சுற்றி எப்படி பல கோள்களும் சுற்றி வருகிறதோ அதே போல் இந்த ட்ரபிஸ்ட்1 என்ற விண்மீனைச்சுற்றி பல கோள்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக அறிவியல் ஆய்வாளரான Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada இது பற்றி நம்மிடையே விளக்கியுள்ளார்.
”2017 ஆண்டில் விண்வெளி ஆராய்சியாளர்கள் ட்ரபிஸ்ட் தொலை நோக்கியின் மூலம் விண்வெளி மண்டலத்தை ஆராய்ந்ததில் சூரியமண்டலத்தை ஒத்து வேறொரு சூரியமண்டலம் இயங்கி வருவதை கண்டுபிடித்ததும், அதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினர். முதல் ஆராய்ச்சியின் படி சூரியனை ஒத்த இந்த விண்மீனுக்கு ட்ரபிஸ்ட்1 (தொலைநோக்கியின் பெயர்) என்று பெயரிட்டு இதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் முதல் ஆராய்ச்சியின் படி சூரிய குடும்பத்தைப் போல் 5 கோள்கள் ட்ரபிஸ்ட்1 ஐ சுற்றி வருவதைக்கண்டுபிடித்தனர். அதன் பிறகு மீண்டும் இரு கோள்கள் ட்ரபிஸ்ட்1 சுற்றி வருவதை அடுத்து கோள்களின் எண்ணிக்கை 5லிருந்து 7 ஆக அதிகரித்தது.
”இந்த ட்ரபிஸ்ட்1 என்ற விண்மீன் சூரியனை விட 10 மடங்கு சிறியது. தவிர இதிலிருந்து வெளிவரும் வெப்பத்தின் அளவும் குறைவு. இதை சுற்றிவரும் 7 கோள்களுமே பூமியை ஒத்த அளவு கொண்டது. இதில் 3 கோள்கள் “habitable zone” "வாழக்கூடிய மண்டலம்" அதாவது நெப்டியூனை போல தொலைவில் இல்லாமலும் மெர்குரி போல மிக அருகில் இல்லாமலும் பூமியைப்போன்று வாழ தகுதியான அமைப்பைக்கொண்டிருக்கிறது . இத்தகைய கோள்கள் ட்ரபிஸ்ட்1 குடும்பத்தில் 3 இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதில் முக்கிய செய்தி என்னவென்றால் இந்த 7 கோள்களும் ட்ரபிஸ்ட்1 சுற்றி வரும் கால அளவு மிக குறைவு.
சூரியகுடும்பத்தில் சூரியனுக்கு அருகில் மெர்குரி என்ற கிரகம் இருக்கிறது. இது சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் வெறும் 88 நாட்கள். இதே போல் ட்ரபிஸ்ட்1 என்ற விண்மீனுக்கு அருகில் இருக்கும் கோள் அதைச்சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் வெறும் ஒன்னரை நாட்கள் மட்டும் தான். அதே போல் ட்ரபிஸ்ட்1 ன் தொலைவில் இருக்கும் 7 கோள் இதை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நாட்கள் வெறும் 18 என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆக அதிகபட்சமாக 18 நாட்களில் ஒரு வருடத்தை கடந்து விடுகிறது இந்த 7 கோள்களும்.” என்கிறார்.
இதைப்பற்றி இவர் கூறிய சுவாரசிய தகவல்கள் தொடரும்...