ஒரே வாரத்தில் பூமிக்குத் திரும்பும் திட்டத்துடன் விண்வெளிக்குச் சென்று, மாதக்கணக்கில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை, பூமிக்கு அழைத்து வருவதற்கான ட்ராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்திருக்கிறது.
அதிசயங்களை மட்டுமே பொதிந்து வைத்திருக்கும் வான்வெளியில், புதிய புதிய அற்புதங்களைக் கண்டறிய, முயன்று கொண்டே இருக்கிறது அறிவியல் உலகம். திகைப்பூட்டும் உண்மைகளை கண்டறிந்து பறைசாற்ற, இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் நாசா என, ஒவ்வொரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் புதுப்புது ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கின்றன.
இந்த அசுரப் பாய்ச்சலில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா'வில் பங்களிப்பவர் தான் சுனிதா வில்லியம்ஸ்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், விண்வெளி ஆராய்ச்சிகளில் கில்லாடி. விண்வெளிப் பயணங்களில் பல சாதனைகளைப் படைத்தவர்.
இவர் 9 நாள்கள் விண்வெளி பயணமாக, ஸ்டார்லைனர் விண்கலத்தில், அமெரிக்க வீராங்கனை புட்ச் வில்மோருடன், கடந்த ஜூன் 5 ஆம் தேதியன்று புறப்பட்டார். 25 மணி நேரம் பயணித்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து, ஆய்வுகளை திட்டமிட்டபடி முடித்துவிட்டு, பூமிக்குத் திரும்ப முற்பட்டபோதுதான், வெடித்தது டெக்னிக்கல் பிரச்னை. ஜூன் 22 ஆம் தேதி பூமியில் தரையிறங்கியிருக்க வேண்டிய சுனிதா குழு, விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் சிக்கல்களால், 3 மாதங்களுக்கும் மேல், விண்வெளியிலேயே தங்கியுள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வழக்கமாக, 3 ரஷ்யர்கள், 4 அமெரிக்கர்கள் என ஆராய்ச்சிக்குழுவினர் இருப்பார்கள். பிற நாடுகளின் விண்வெளி வீரர்களும் இருப்பார்கள். சுனிதா - புட்ச் குழு ஜூன் மாதம் சென்றது போல, பிற வீரர்களும் சென்று சோதனைகளை மேற்கொள்வர்.
அப்படி சுனிதா சென்றபோது, ஆய்வுகள் நடந்தது. அந்த ஆய்வுகள் செப்டம்பர் 23 ல் நிறைவடைத்த பிறகு, அடுத்த சுற்று ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இந்த குழுவின் தலைவரே சுனிதா வில்லியம்ஸ்தான்.
சுனிதா தலைமையில் நடைபெற்று வரும் ஆய்வுகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும். நாங்கள் இங்கு பிஸியாக இருக்கிறோம் என்று சுனிதா ஏற்கனவே சொல்லியிருந்ததன் பொருள் இப்போது, புரியலாம்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு, வீரர்களுடன் விண்கலத்தை அனுப்புகிறது. இந்த நிலையில்தான், 'க்ரூ டிராகன் 9' என்ற காப்ஸ்யூல் விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்தது. கடந்த வியாழனன்று இது புறப்பட திட்டமிடப்பட்டது.
ஆனால், அமெரிக்காவில் ஹெலன் புயல் வீசியதால், பயணம் தள்ளிப்போனது. 4 பேர் பயணிக்கும், 'க்ரூ டிராகன் 9' விண்கலத்தில், நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோர், ஆய்வுக்கருவிகளுடன் புறப்பட்டனர். திங்களன்று (நேற்று - செப் 30) அதிகாலை 3 மணிக்கு வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் உட்பட அங்கிருந்த பிற விண்வெளி வீரர்களை கண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுதொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.
இக்குழுவுடன் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் மீண்டும் பூமியில் கால் பதிக்க இருக்கிறார்கள் சுனிதாவும், வில்மோரும் என்பது கூடுதல் தகவல்...