மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியை மேற்கொள்வதற்காக, நாசா சோதனை ஓட்டமாக சமீபத்தில் போயிங் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. ஆனால் ஹீலியம் கசிவு போன்ற கோளாரினால் போயிங் விண்கலமானது விண்வெளியிலேயே தங்கிவிட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் பூமிக்கு திரும்பமுடியாத நிலையில் விண்வெளியிலேயே தங்கிவிட்டனர்.
இது ஒருபக்கம் இருக்க, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் போயிங் நிறுவனத்திற்கு போட்டியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸின் போலரிஸ் டான் (Polaris Dawn) என்ற விண்கலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டது. இது நேற்று அதிகாலை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 4 பேர் அடங்கிய குழுவுடன் விண்ணில் பாய தயாராக இருந்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக இதிலும் ஹீலியம் கசிந்ததால், பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் போலரிஸ் டானை சரி செய்யும் முயற்சியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். அதனால் நேற்று அதிகாலை செல்லவிருந்த ஸ்பேஸ் எக்ஸின் விண்கலமானது இன்று அதிகாலை விண்ணில் பாயும் என்று தகவல் வெளியானது. ஆனால் எதிர்பாரா விதமாக இன்று இது மீண்டுமொரு தள்ளிப்போயுள்ளது. இருப்பினும், இந்த முறை தொழில்நுட்ப கோளாறு காரணமில்லை என்றும், வானிலை மாற்றத்தால் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “புளோரிடா கடற்கரையில் உள்ள டிராகனின் ஸ்ப்ளாஷ் டவுன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சாதகமற்ற வானிலை காரணமாக, போலரிஸ் டானின் பயணம் மீண்டும் தள்ளிப்போகிறது. இன்று இரவோ அல்லது நாளை காலையோ போலரிஸ் டானை விண்ணுக்கு அனுப்ப ஆயத்தமாகிறோம். சாதகமான வானிலை ஏற்படுகிறதா என்பதை எங்கள் குழு தொடர்ந்து கண்காணிக்கும்” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதில் 5 நாள் பயணமாக பொறியாளர்கள் அன்னா மேனன், சாரா கில்லிஸ், ஓய்வுபெற்ற விமானப்படை விமானி ஸ்காட் போட்டீட், பில்லியனரும் தொழிலதிபரும் இந்த திட்டத்துக்கு நிதி அளிப்பவருமான ஜாரெட் ஐசக்மேன் ஆகிய 4 பேர் பயணப்பட திட்டமிடப்பட்டிருந்தது.