ESOவின் மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் விண்வெளியில் தோன்றிய ஒளிரும் வாயுவின் பட்டாம்பூச்சிப் போன்ற வடிவத்தை வானியலாளர்கள் பார்த்துள்ளனர். பூமியிலிருந்து 3000 முதல் 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்வெளியில் இந்த காட்சி நடந்துள்ளது.
வானத்தில் தோன்றிய இந்த பட்டாம்பூச்சியின் இறக்கைகள் கிட்டத்தட்ட 19 ட்ரில்லியன் கிலோமீட்டர் அதாவது இரண்டு ஒளி ஆண்டுகள் செல்லும் தூரம். உடற்பகுதியை உருவாக்கிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் சுமார் 10,000 டிகிரி செல்ஷியஸ் அதாவது சூரியனைவிட இரண்டு மடங்கு வெப்பம் அதிகமாகவதால் இதுபோன்ற காட்சி உருவாகியுள்ளது. அதன் மையத்தில் இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே அமைந்து சமச்சீர் தோற்றத்தை உருவாக்கியதால்தான் இந்த ஒரே அளவிலான இறக்கைகள் தோன்றியது என வானியலாளர்கள் கருதுகின்றனர்.
என்ஜிசி 2899 ஐ பூமியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து மட்டுமே பார்க்கமுடியும். மேலும் சக்திவாய்ந்த தொலைநோக்கியால் மட்டுமே இதுபோன்ற காட்சிகளை துல்லியமாக பார்க்கமுடியும். இந்த தொலைநோக்கி சிலியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள நான்கு 8.2 மீட்டர் தொலைநோக்கிகள் விண்வெளியில் இருக்கும் பல விண்கற்கள், சிறுகோள்கள் மற்றும் ஈர்ப்பு அலையிலிருந்து உருவாகும் வெளிச்சம் போன்ற எண்ணற்ற உருவங்களை கண்டறிந்துள்ளது.
1835ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் வானியலாளர் ஜான் ஹெர்ஷல் என்பவரால் நெபுலா கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் இதுபோன்ற துல்லியமான காட்சியை இதற்கு முன்பு யாரும் பார்த்ததில்லை.