இந்தூரை சேர்ந்த ராஜ்ஹான் என்பவர் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனர் டைம் குக்கிற்கு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார். அதில், தனது அப்பாவிற்கு திடீரென இதயத் துடிப்பு அதிகரித்ததை அவரது ஆப்பிள் கடிகாரம் காட்டிக் கொடுத்ததாகவும், சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றதால்தான் அறுவைசிகிச்சை செய்து தற்போது அவர் ஆரோக்யமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யவிதமாக டிம் அதற்கு பதிலளித்திருந்தார். அதில், ’’இதை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி! உங்கள் தந்தைக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த, கண்காணிக்க பல சிறப்பம்சங்களை கடிகாரங்களில் வெளியிட்டு வருகின்றனர் ஆப்பிள், சாம்சங், கார்மின் மற்றும் ஃபிட்பிட் போன்ற நிறுவனங்கள். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருப்பவர்களும், அதிக உடலுழைப்பு இல்லாதவர்களும் ஆரோக்யத்தை கண்காணிக்க, தொடர்ந்து வெளிவரும் ஸ்மார்ட் கடிகாரங்களை வாங்கி வருகின்றனர். சுமார் ரூ.20000 விலையுள்ள கடிகாரங்கள் ஃபிட்னெஸை தாண்டி ஆரோக்யத்தை தீவிரமாக கண்காணித்து மாற்றங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.
உதாரணமாக, தற்போது வந்துள்ள சாம்சங் வாட்ச் 3 இல் ஒரு பிரத்யேக வசதி உள்ளது. ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கும். இந்த கொரோனா தொற்று நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் தொடர்பு எண்களுக்கு எச்சரிக்கை கொடுத்துவிடும். இதனால் அந்த நபருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்துவிடும்.
தற்போது ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கடிகாரத்திலும் ஆக்ஸிஜன் அளவு, தூக்கம், கை கழுவுதல் மற்றும் புதிய உடற்பயிற்சி வசதிகளைக் கொண்டுள்ளது. கார்மின் கடிகாரம் தற்போது சோலார் சார்ஜிங் வசதியுடன் வந்திருக்கிறது.