அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூக்குக் கண்ணாடியை ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடியாக உருவாக்கியுள்ளது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை என கண் பிரச்னைகளுக்கு ஏற்ப மூக்குக் கண்ணாடி அணிவார்கள். இப்போதெல்லாம் பார்வை பிரச்னை இல்லை என்றாலும் ஸ்டைலுக்காகவே நிறைய மூக்குக் கண்ணாடிகள் உள்ளன.
அதுமட்டுமின்றி, கணினி பயன்படுத்துபவர்களுக்கு, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு என கண்ணை பாதுகாக்க பலவகை கண்ணாடிகள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூக்குக் கண்ணாடியை ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடியாக உருவாக்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் ஓரத்தில் குறைந்த ஒலி அளவு கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் மூலம் பாடல்களை கேட்கலாம். அதேபோல் செல்போன் அழைப்புகளையும் கண்ணாடி மூலமே பேசிக்கொள்ளலாம். ஸ்மார்ட் கிளாஸ் என்றாலும் பார்வைக்கு இந்த வகை கண்ணாடிகள் சாதாரண மூக்குக் கண்ணாடிகளாகவே இருக்கின்றன.
இதனால் இதனை எப்போதும் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல் கண்ணாடியை எங்கேனும் மறந்து வைத்தாலும் ஒரு க்ளிக் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என கண்ணாடியை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.