WhatsApp-ன் மொத்த சாட்டையும் புதிய ஃபோனுக்கு ஷேர் செய்யலாம்! அறிமுகமாகும் புதிய அம்சம்!
தகவல் பரிமாற்ற செயலிகளானது தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் WhatsApp ஆனது, பல புதிய அப்டேட்களை தொடர்ச்சியாக செயல்முறை படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் ”வாட்சப் ஸ்டேட்டஸில் நமக்கு தெரியாமல் பகிரப்படும் நம்முடைய தகவல்களுக்கு ரிப்போர்ட் செய்யவும், ஸ்பேம் கால்களை தவிர்க்கவும், வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸாக வைக்கும்” பல அப்டேட்கள் முதல் தொடங்கி, ”நான்கு ஸ்மார்ட் போன்கள் வரை வாட்சப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்” என்பது வரையிலான பல்வேறு புதிய அம்சங்களில் மிரட்டி வருகிறது மெட்டா நிறுவனம்.
Chat மற்றும் அட்டாச்மெண்ட் ஃபைல்களை பேக்கப் இல்லாமல் ஷேர் செய்துகொள்ளலாம்!
அதன் அடுத்த அம்சமாக, “WhatsApp-ல் செய்துள்ள அனைத்து Chat மற்றும் அட்டாச்மெண்ட் ஃபைல்களையும், எந்த வித பேக்கப்களும் இல்லாமல் புதிய மொபைல் போனிற்கு நேரடியாக பகிர்ந்து கொள்ளும்”, புதிய அப்டேட்டை கொண்டுவருவதில் வேலை செய்துவருகிறது மெட்டா. இந்த அம்சமானது ஒரு பயனாளர் தனது வாட்சப் கணக்கை ஒரு போனிலிருந்து, மற்றொரு போனிற்கு பரிமாற்றுவதை எளிதாக்குகிறது.
அதாவது நாம் புதிய போனை வாங்கும் போது, பழைய போனில் இருக்கும் நம் மொத்த சாட் மற்றும் ஃபைல்கள் தேவை என்றால், அதனை நாம் கிளவுட் மற்றும் கூகுள் டிரைவ் பேக்கப்பில் சேமித்து வைத்துவிட்டு தான், மற்றவற்றில் பகிர்ந்துகொள்ளவே முடியும். ஆனால் தற்போது அப்படி எந்தவிதமான பேக்கப்களையும் செய்யாமலேயே, நம்முடைய சாட் மற்றும் ஃபைல்களை அப்படியே புதிய போன்களுக்கு ஷேர் செய்துகொள்ள முடியும் வழிவகை செய்கிறது இந்த அப்டேட்.
புதிய அம்சத்தின் பயன் என்ன?
சில பயனாளர்கள் பல வருடங்களாக பயன்படுத்திய சாட்களை அப்படியே சேமித்து வைத்திருக்க நினைப்பார்கள், சிலர் தங்களது மெசேஜ் சாட்கள், 2 போன்களில் இருக்க வேண்டாம் என நினைப்பார்கள், அதையும் மீறி சாட்களின் பேக்கப்பை ஷேர் செய்ய நினைக்கும் பயனாளர்கள், மொபைல் நெட்வொர்க்கில் ஸ்லோவாக செய்யவேண்டும் என்ற மலைப்பில் கூட இருப்பார்கள்.
அப்படி இருக்கும் பயனாளர்கள் பெரிதும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இந்த புதிய அம்சம் வழிவகை செய்கிறது. இதன்படி வாட்சப்பில் இருக்கும் ஒரு சாட்டை அப்படியே, QR கோட் மூலம் ஒரு ஃபோனில் இருந்து மற்ற போனிற்கு நேரடியாக பரிமாற்றிக்கொள்ள முடியும்.
எப்படி Chat-ஐ ஷேர் செய்துகொள்ள முடியும்?
வாட்ஸ்அப் ஃபியூச்சர் டிராக்கரான WABetaInfo அறிக்கையின் படி, இந்த புதிய அப்டெட்டானது விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் சென்று சேரும் வகையில், செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம், WhatsApp பயன்பாட்டாளர்கள் தங்களது செட்டிங்கிற்கு சென்று, வாட்சப் செட்டிங்ஸ் > சாட் > சாட் டிரான்ஸ்பர் என்பதற்குச் செல்ல வேண்டும். அதன் அடுத்த படியாக உங்களுக்கு QR கோட் காண்பிக்கும், அதன்பின்னர் நீங்கள் Chat-ஐ ஷேர் செய்ய விரும்பும் மொபைல் போனில் ஸ்கேன் செய்து பரிமாற்றிக்கொள்ள முடியும்.