சந்திரயான் 3 விண்கலம் தனது அறிவியல் ஆய்வுப் பணிகளை முடித்து செப்டம்பர் 4ஆம் தேதி ஸ்லீப் மோடுக்கு சென்ற நிலையில், நிலவின் இரவு பொழுதுகளில் விண்கலம் Turn off செய்யப்பட்டிருந்தது.
காரணம், அந்நேரத்தில் நிலவில் தென் பகுதியில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்திருந்தது. செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10:45 மணிக்கு லேண்டர் தரையிறங்கிய பகுதியில் மீண்டும் பகல் பொழுது தொடங்கியதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்கலத்திடம் இருந்து சமிக்ஞைகள் வருகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் தற்போதுவரை விண்கலத்தில் இருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை.
சீனாவின் ரோவரில் இருக்கும் கதிரியக்க வெப்ப இயக்க கருவி, இரவு நேரத்திலும் விண்கலத்தை சீரான வெப்ப நிலையில் வைத்திருப்பதால் மின்னணு கருவிகள், பேட்டரி போன்றவை பழுதடையாமல் செயல்படும். ஆனால் சந்திரயான் விண்கலத்தில் அதுபோன்று கருவிகள் வைக்கப்படாதது விண்கலத்தை மீண்டும் எழுப்பும் முயற்சியில் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
சந்திரயான் 3 திட்டத்தை பொறுத்த வரை தரையிறங்கி அதன் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு 14 நாட்கள் முழுமையாக செயல்பட்டதன் மூலம் 100% வெற்றி பெற்றுள்ளது. நிலவின் ஒரு வாழ்நாள் மட்டுமே இயங்கக்கூடிய இலக்குடன் சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டதால் மீண்டும் எழுப்பும் முயற்சி தோல்வியடையும் என்றே விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மூத்த விஞ்ஞானி விஞ்ஞான் பிரசார் த.வி வெங்கடேஸ்வரன், அவர்களிடம் இது குறித்து கேட்டபொழுது,
“நிலவில் தரையிறங்கியபோது இருந்த வெப்பம் 14 நாட்களுக்குப்பிறகு இல்லை. குளிர், வெப்பநிலை மாறுபாடுகளை இயந்திரம் தாங்காது. பகலுக்கும், இரவுக்கும் வெப்ப வித்தியாசம் அதிகம்.
சீனாவின் ரோவரில் கதிரியக்க, வெப்ப இயக்க கருவி இரவிலும் செயல்படும். ஆனால் சந்திரயான் 3ல் இத்தகைய கதிரியக்க வெப்ப இயக்கக் கருவி இல்லை. இருப்பினும் இது நிலவின் ஒரு பொழுதில் செயல்பட மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்பதால், சந்திரயான் 3 திட்டம் தான் செய்த 14 நாள் ஆய்வால் 100% வெற்றிதான் பெற்றுள்ளது” என்றார்.