குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் ஹவாய் பல்கலைக்கழக டெலஸ்கோப் எடுத்த படங்களின் மூலம் பூமிக்குச் செல்லும் சிறுகோள் ஒன்றை கண்டறிந்துள்ளதாக தனியார் இந்திய விண்வெளி கல்வி நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தச் சிறுகோள் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் காணப்படுகிறது. பத்து லட்சம் ஆண்டுகளில் பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த 14 வயதுள்ள மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஸ்பேஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் கூறியுள்ளது.
“அந்த சிறுகோளுக்கு எப்போது பெயரிட வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்கிறார் விண்வெளி வீரராக விரும்பும் மாணவி வைதேகி வெக்காரியா.
தற்காலிகமாக ஹெச்எல்வி2514 என்று சிறுகோளுக்கு பெயரிட்டுள்ளனர். அதன் சுற்றுப் பாதையை நாசா உறுதிப்படுத்திய பின்னரே அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படலாம் என ஸ்பேஸ் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பள்ளிப்படிப்பில் சுட்டியாக விளங்கும் மாணவி ராதிகா லக்கானி, “எங்கள் வீட்டில் டிவிகூட இல்லை. அதனால்தான் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது” என்கிறார். சர்வதேச வானியல் தேடல் அமைப்புடன் (ஐஏஎஸ்சி) சேர்ந்து ஸ்பேஸ் இந்தியா நடத்திய விண்வெளி ஆய்வுப் பயிற்சியின்போது சிறுகோளை அந்த இரு மாணவிகளும் கண்டறிந்துள்ளனர்.