வியாழனை விட சனி கிரகமே அதிக நிலவுகளை கொண்டது என அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ‘கார்னிஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 17 துணைக்கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. சனி கிரகத்திற்கு எதிரான பாதையில் சுற்றும் துணைக் கோள்கள் ஒரு முறை சனி கிரகத்தை சுற்றி வர 3 வருடம் காலத்தை எடுத்து கொள்கிறது. அதேபோல சனி கிரக பாதையில் சுற்றும் துணைக் கோள்களில் இரண்டு துணைக் கோள்கள் சனி கிரகத்தை சுற்றி வர 2 வருட காலம் எடுத்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் அதிக நிலவுகளை கொண்ட கிரகத்தில் சனி முன்னிலை பெற்றுள்ளது. தற்போது சனி கிரகத்தை 82 நிலவுகள் சுற்றி வருவதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. இதற்கு முன்பு வியாழன் கிரகம் 79 நிலவுகளுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.