இஸ்ரோவின் வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சிகம்; படையெடுக்கும் சென்னைவாசிகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் அமைந்துள்ள இஸ்ரோ அறிவியல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இளம் தலைமுறையினரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க உந்துதலாக இருக்கும் இஸ்ரோ ஆராய்ச்சி மையம் பற்றி பார்க்கலாம்....
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்pt web
Published on

செய்தியாளர் பால வெற்றிவேல்

இஸ்ரோ முதன்முதலில் அனுப்பிய ஆரியபட்டா செயற்கைக்கோள் முதல் தற்போது அனுப்பிய இன்சாட் செயற்கைக்கோள் வரை அனைத்தும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் அமைந்துள்ள இஸ்ரோ அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எஸ்.எஸ். எல்.வி, பி.எஸ்.எல்.வி, ஜிஎஸ்எல்வி என இஸ்ரோ அனுப்பிய ராக்கெட்டுகளின் மாதிரி வகைகள் இங்கு வரிசை கட்டி இருக்கின்றன.

இஸ்ரோ தலைவராக சிவன் இருந்த போது பார்வையாளர்கள் ராக்கெட் நிகழ்வை நேரில் கண்டுகளிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ராக்கெட் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டது. சுமார் 5,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை தெளிவாக பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அதே அரங்கத்தில் இஸ்ரோவின் வரலாற்று அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1975 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்கள் முதல் முக்கிய திட்டங்களான சந்திரயான், ஆதித்யா, ககன்யான் குறித்தான விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

ராக்கெட் செயல்படும் விதம், கிரையோ ஜெனிக் எஞ்சின் பயன்பாடு, செயற்கைக்கோள்கள் செயல்படும் விதம், இஸ்ரோ இதுவரை அனுப்பிய ராக்கெட்டுகளின் வெற்றி பட்டியல் போன்றவை படங்கள் மூலமும் மாதிரி வடிவங்கள் மூலமும் விளக்கப்பட்டுள்ளன. இந்தியா, பல சர்வதேச நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ள விண்வெளி அறிவியல் திட்டங்கள் குறித்தான விவரங்களும் ஆய்வு கட்டுரைகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சென்னை 100 கிலோமீட்டரில் இருக்கும் நிலையில் ராக்கெட் ஏவும் நாளன்று அதிகப்படியான சென்னை வாழ் மக்களே வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அறிவியல் அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு மூன்று மாடிகள் மேலே சென்றால் ராக்கெட் ஏவும் நிகழ்வை பெரிய ஆரவாரத்தோடு கண்டு ரசிக்க முடியும்.

ராக்கெட் ஏவும் நிகழ்விற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு இஸ்ரோ இணையதளத்தில் நிகழ்வை நேரில் கண்டு களிப்பதற்கான சுட்டி இணைக்கப்பட்டிருக்கும். பாதுகாப்பிற்காக நமது ஆதார் உள்ளிட்ட விவரங்களோடு இணையதளத்தில் முன்பதிவு செய்து இஸ்ரோ ராக்கெட் ஏவும் நிகழ்வை நேரில் கண்டு களிக்க முடியும். நேரில் வந்தும் அனுமதிச்சீட்டு பெற முடியும்.

ஆனால் அதிகம் பேர் வருவதால், முதலில் வருவோரே கேலரிக்குள் அமர்ந்து ராக்கெட் ஏவும் நிகழ்வை பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அதோடு சேர்த்து அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இஸ்ரோவின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

சென்னையைச் சேர்ந்த ஜானகி இதுகுறித்து கூறுகையில், “முதன்முறையாக இங்கு வந்துள்ளேன். மிக உற்சாகமாக உள்ளது. சந்திரயான் போன்றவைகள் ஏவப்படும் போதே பார்க்க வேண்டும் என நினைத்தேன். செய்திகளில் இதுகுறித்து பார்த்ததும் முன்பதிவு செய்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com