8 அம்சக் கோரிக்கைகளுடன் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 4 நாட்களுக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சாம்சங் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், பரிசுப் பொருட்கள் வழங்கப்படாது என்று சுற்றறிக்கை மூலம் அதிர்ச்சி அளித்திருக்கிறது சாம்சங் நிர்வாகம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சாம்சங் தொழிற்சாலையில் 1500க்கும் அதிக நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், ஊதிய உயர்வு, போனஸ், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
கடந்த 9 ஆம் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ், பணியாளர்களின் வருகைப் பதிவிற்கு ஏற்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், பணிக்கு வராத நாட்களுக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்பட்டு போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி பரிசை வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், பணிநீக்கம் செய்ய நேரிடும் என்று சாம்சங் ஆலை தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 3 பேருக்கு ஏற்கனவே எச்சரிக்கை இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது போராட்டக்காலத்துக்கு போனஸ் கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. சிஐடியு போன்ற தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது போன்ற கோரிக்கைகளை சாம்சங் நிர்வாகம் ஏற்காத நிலையில், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.