பெரிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு எப்படி?

பெரிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு எப்படி?
பெரிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு எப்படி?
Published on

இன்றைய தொழிநுட்ப உலகில், பல இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பு கனவுகளில் மிகப்பெரிய சமூக வலைத்தளங்கள் கட்டமைக்கும் நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர். முதல் தேதி பைநிறைய சம்பளம், நிறுவனங்களின் வசதிகள், வாழ்க்கைத்திறம் மேம்பாடு, வெளிநாட்டுப் பயணக் கனவுகள் என்று பல்வேறு கோணங்களில் இந்தக் கனவுகள் விரிவடைகின்றன. 

ஆனால் இந்த நிறுவனங்களின் பணிச்சுமை குறித்தோ அல்லது பணிச்சூழல் குறித்தோ சில நேரங்களில் மிகக் கடுமையான கேள்விகள் முன் வைக்கப்படுக்கின்றன. அவ்வாறான ஒரு கேள்வி, ஒரு வழக்கு, ஓர் மேனாள் ஒப்பந்த ஊழியரால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. 

கலிபோர்னியா மாகாணத்தில், சான் மேடியோ நகரத்தில், செலினா ஸ்கோலா என்கின்ற பெண்மணி இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வரை, சுமார் ஒன்பது மாதங்கள் செலினா ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். அவரது பணி, ஃபேஸ்புக்கில் பயனாளர்கள் தரவேற்றம் செய்யும் வீடியோ மற்றும் நேரடி ஒளி வரிசைகளை ஆய்வு செய்தல் ஆகும். மனித மனங்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்கும் கொடூரமான வீடியோ மற்றும் நேரடி ஒளி வரிசைகளை கண்டறிந்து அவற்றை ஃபேஸ்புக்கில் இருந்து அகற்றுவது அவரது அன்றாடப் பணி. 

இவ்விதமான கொடூரமான வீடியோ மற்றும் நேரடி ஒளி வரிசைகளை தினம் தினம் கண்டதால், தான் ஒரு மிகப்பெரிய மனஅழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதனால் தன் உடல் மற்றும் மனநலம் பாதிப்பட்டுள்ளதாகவவும், இதற்கு ஃபேஸ்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று செலினா வழக்கு தொடர்ந்துள்ளார்.

பணியிடங்கள் சார்ந்த பாதுகாப்பு விதிகள் நாட்டிற்கு நாடு மாறுபடும். மிகப் பாதுகாப்பான பணியிடம், கனவு நிறுவனம் என்கின்ற பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது இவ்வாறு ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 

பணி இடங்கள், பணி நேரம், பணிக் கொடைகள், ஊழியர் நலன்கள் என்கின்ற கோணம் தாண்டி "பணி பொறுப்பு" என்கின்ற நோக்கிலும் பணியிடங்கள் குறித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதுவும் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான புதுப் புது பணிவாய்ப்புகள் உருவாகிவரும் சூழ்நிலைகளில், உருவாக்கப்படும் பணிவாய்ப்புகளின் தகுதி மற்றும் தரம் குறித்து மேலும் பல வகையான கலந்துரையாடல்களும், ஆராச்சிகளும் நிகழ்த்த வேண்டிய தருணமிது. 

காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான தொழில்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் பணி வாய்ப்புகள் மாறிக்கொண்டே உள்ளது. இந்தவிதமான பணி வாய்ப்புகள், பல்வேறு வகையான, கவர்ச்சிகரமான பலன்களை பணியாளர்கள் முன் வைத்து அவர்களை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய அழைக்கிறது. ஆனால் குறுகிய கால பலன்கள் தாண்டி ஒரு நீண்ட கால நோக்கில், இவ்வகையான பணிப்பொறுப்புகள் ஊழியர்களுக்கு எவ்வகையான சவால்களை, மனம் மற்றும் உடல் ரீதியாக தருகிறது என்பது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி. 

நீண்ட விவாதங்களும், ஆழமான ஆராச்சிகளும், அவற்றின் மூலம் பெறப்படும் மேம்படுத்தப்பட்ட அரசாணைகள் மற்றும் கொள்கை வடிவமைப்புகள் மட்டுமே, இவ்வகையான புதுப் பணியிடப் பாதுகாப்புகளை உறுதி செய்ய முடியும். பணியாளர்கள் மற்றும் புதிய ஊழியர்களும் தங்களவில் "பணிப் பொறுப்பு" குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படியில் தங்கள் வேலைகளைத் தேர்ந்தெடுப்பதுவும் மிக முக்கியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com