நாசா கடந்த ஜூன் மாதம் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விண்வெளிக்கு அனுப்பி, உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தது நினைவிருக்கலாம். எதிர்பாராவிதமாக அவர்கள் சென்ற விண்கலம் பழுதானதால் இருவரும் விண்வெளியிலேயே தற்போதுவரை தங்கியுள்ளனர். இதனால் இவர்கள் சென்ற போயிங் விண்கலமானது ஆளில்லாமல் திரும்பி வந்தது.
இந்நிலையில் விண்வெளியில் இருக்கும் இருவர் குறித்தும் பலவித வதந்திகளும் போலி செய்திகளும் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்பேஸ் எக்ஸின் க்ரூவின் உதவியால் இருவரும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரும்பி வருவார்கள் என்று நாசா கூறியிருந்தது.
இது இப்படி இருக்க ரஷ்யா நேற்று மாலை 4.23 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் என்றொரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது .
இதில் நாசா விண்வெளி வீரரான டான் பெட்டிட் , ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர்களான அலெக்ஸி ஓவ்சினின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோர் 6 மாத ஆராய்ச்சிக்காக விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே 9 பேர் இருக்கும் நிலையில் இவர்களையும் சேர்த்து 12 பேராக விண்வெளி வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
2025 பிப்ரவரி மாதம் திரும்பி வரும் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருடன் ரஷ்ய வீரர்களும் திரும்பி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.