சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ஆம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட நிலையில் புவியின் சுற்றுவட்ட பாதையை கடந்து நிலவை நோக்கி பயணித்து தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 5ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சென்ற சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையின் அதிகபட்ச தூரமாக 18,074 கிலோ மீட்டர் நீள் வட்டப் பாதையில் முதலில் சுற்றியது.
அடுத்ததாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு 10:30 மணி முதல் 11.30 மணி அளவில் விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 4313 கிலோ மீட்டர் என்கிற அளவிற்கு குறைக்கப்பட்டு நிலவை நோக்கி சுற்றி வருகிறது. இந்நிலையில் சந்திரயான் விண்கலம் இரண்டாவது முறையாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் உயரம் குறைக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 9 (இன்று) நண்பகல் 1 மணி முதல் 2 மணி வரை இதற்கான பணிகள் நடைபெறும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் ரஷ்யாவோ லூனா 25 எனப்படும் விண்கலத்தை மாஸ்கோவில் இருந்து 5500 கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் வொஸ்டோச்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்தில் இருந்து அனுப்பவுள்ளது. லூனா 25 திட்டமும் சந்திரயான் போன்று நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்கான திட்டமிட்டமாகும்.
1976 ஆம் ஆண்டு ரஷ்யா முதல் முதலாக நிலவிற்கு விண்கலம் அனுப்பிய நிலையில் 47 வருடங்களுக்கு பிறகு ரஷ்யா நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அனுப்புகிறது. லூனா 25 ஐந்து முதல் ஏழு நாட்களில் நிலவின் திட்டமிட்ட பகுதியில் தரையிறங்கும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
லூனா 25 திட்டம் 2021 ஆம் வருடமே செயல்படுத்த வேண்டியது என்றும் கொரோனா, உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக தள்ளிப்போனது என்றும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
1800 கிலோ எடை கொண்ட லூனா 25-ன் செயற்கைக்கோள் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி நிலவின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள், கனிமங்கள், எரிபொருள் ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்ய இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் நிலையில் ஆக. 9 (இன்று) பிற்பகல் ஒரு மணிக்கு இரண்டாவது முறை உயரம் குறைப்பு நடைபெறும். தொடர்ந்து 14 ஆம் தேதி மூன்றாவது முறையாக சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து உயரம் குறைக்கப்படும்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி விண்கலத்தின் உந்துவிசைக்கலன் மற்றும் லேண்டர் தனியாக பிரிந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5:47க்கு நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில ரஷ்யாவின் லூனா 25, ஆகஸ்ட் 11ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4 .40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. லூனா 25 மட்டுமின்றி லூனா 26, 27, 28 ஆகிய தொலைநோக்கு திட்டங்களையும் நிலவை நோக்கி அனுப்ப உள்ளது ரஷ்யா.
ரஷ்யாவின் லூனா 25-ம் இந்தியாவின் சந்திரயானும் நிலவை நோக்கிய ஆய்வு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதே இரு நாட்டு விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பும்.