சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் அமைப்பதற்காக, மூவேட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த ரோபோடிக்ஸ் ஆய்வகம், கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் என்கிறார் அந்நிறுவன நிதிநிலை அலுவலர்.
இதுதொடர்பாக லயோலா கல்லூரி முதல்வர் நம்மிடையே தெரிவிக்கையில், “வரப்போகும் இந்த அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தின் மூலம் 600-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மாணவர்கள் பயனடைவார்கள். கூடுதலாக நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆய்வகத்தில் நவீன தொழில்நுட்ப கருவிகள், கணினிகள், AI தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்பட இருப்பதால் மாணவர்கள், கல்லூரி முடித்து பணிக்கு செல்லவும் இது மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.
ஒப்பந்தம் கையெழுத்தான 45 நாட்களில் ஆய்வகம் கட்டமைக்கப்பட உள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இது போன்ற ஆய்வகங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு கூடுதல் பயனாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.