மல்டிமீடியா மெசேஜிங் செயலியான ஸ்னாப்சேட்டில் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 319 மில்லியனை கடந்துள்ளது. அதன் பலனாக அந்நிறுவனம் முதல்முறையாக லாபம் ஈட்ட தொடங்கியுள்ளதாக அதன் தாய் நிறுவனமான ஸ்னாப் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவன செயலியான இந்த ஸ்னாப்சேட்டை தமிழ் உட்பட 37 மொழிகளில் அதன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2021-இல் நிலையான வளர்ச்சியை தங்கள் நிறுவனம் எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது ஸ்னாப். சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் 42 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“2021 எங்களுக்கு அமோகமான ஆண்டாக அமைந்தது. நீடித்த மற்றும் நிலையை வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது. இதற்காக இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் உட்பட சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோம். ஆக்மென்டட் ரியாலிட்டியில் நாங்கள் செய்த முதலீட்டின் பலன் இது” என ஸ்னாப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Evan Spiegel தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் iOS ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேற்கொண்டுள்ள தனியுரிமை மாற்றத்தினால் பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்னாப்சேட் நிறுவனத்திற்கு அந்த மாற்றங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.