கடந்த ஆறு மாதமாக இலவச சேவைகளை வழங்கி வந்த ஜியோவின் சலுகை, இன்றுடன் முடிவடைகிறது.
தொலைத்தொடர்பு துறையில் கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இலவச சேவை அறிவிப்புகளால் மிக குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் இலவச சேவைகளைக் குறைந்த செலவில் பெறலாம் என அறிவித்திருந்தது. சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ள ஜியோவின் இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகின்றன. இதன் பிறகு ஜியோ தொலைபேசி எண்ணை பயன்படுத்த வேண்டுமானால், உறுப்பினர் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி, ஜியோ பிரைம் எனும் திட்டத்தில் சேர வேண்டும்.
இதுவரை ஜியோ பயனர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைக்குள் 99 ரூபாய் செலுத்தி ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த ரீசார்ஜும் செய்யவில்லை என்றால் சுமார் 90 நாட்களுக்குள் ஜியோ சிம் செயலிழந்துவிடும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே டிசம்பர் வரை அறிவிக்கப்பட்டிருந்த இலவச சேவைகள், மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் காரணமாக, இன்றுவரை (மார்ச் 31) நீட்டிக்கப்பட்டிருந்தது. இலவச சேவையை இன்னும் நீட்டிப்பார்கள் என்று வாடிக்கையாளர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இப்போது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.