பெங்களூரு அதன் அதிக வாடகை விலைகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு எப்போதும் பெயர் போனது. நகரத்திற்கு புதியதாக செல்பவர்களுக்கு வீடு வாடகை எடுப்பதற்கான தேவை அதிகம் இருப்பதால், அங்கு எப்போதும் வீடு கிடைப்பது கடினமாகவே இருக்கும். சிலர் “பெங்களூரில் வாடகைக்கு வீடு எடுப்பதை விட, ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிது” என்று கூறுகின்ற அளவுக்கு, வீட்டு உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் மிக அதிகமாகவும், பூர்த்தி செய்வதற்கு கடினமானதுமாகவே இருக்கும்.
இந்நிலையில், தற்போதும் அதேபோன்ற ஒரு சம்பவத்தை பற்றி, லிங்க்ட்இன்-ல் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பட்டதாரி நபருக்கு 12ஆம் வகுப்பில் பெற்ற குறைந்த சதவீத மதிப்பெண்ணால் எப்படி வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டது என்பதை கூறியுள்ளார்.
வீடு மறுக்கப்பட்டதற்கான வாட்ஸ்அப் உரையாடலை லிங்க்டுஇன்-ல் பகிர்ந்திருக்கும் நபர் ஒருவர், “நீங்கள் உங்கள் எம்பிஏ படிப்பை படிப்பதற்கு மட்டுமின்றி, வீடு வாடகைக்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. பீக் பெங்களூர் தருணம்” என்ற கேப்சனோடு பகிர்ந்துள்ளார்.
வாடகைக்கு வீடு தேடித்தரும் தரகர் ஒருவர், வீடு தேடும் பட்டதாரி நபரிடம் பேசும் அந்த வாட்ஸ்அப் சாட்டில், “வீட்டு உரிமையாளர் உங்களுக்கு வாடகை தர ஒப்புக்கொண்டதாகவும், அதற்காக நீங்கள் உங்களுடைய லிங்குடுஇன் அல்லது டிவிட்டர் ஐடி மற்றும் உங்களின் கம்பேனி டீடெய்ல்ஸ் மட்டுமல்லாது 10வது-12வது மார்க்ஷீட் விவரங்களையும் அனுப்புங்கள்” என்று தரகர் கேட்கிறார்.”
அதற்கு அந்த பட்டதாரி நபரும் கூறிய அனைத்து டாக்குமெண்ட்களையும் அனுப்பி வைக்கிறார்.
பின்னர் ஒரு ரிப்ளையில், ”உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்பினேன் அதற்கு வீட்டு உரிமையாளர் வாடகைக்கு தர முடியாது என்று கூறிவிட்டார்.
உங்களுடைய 12வது மதிப்பெண் வெறும் 75% சதவீதம் தான் இருக்கிறதாம், அவர் 90% மார்க்கை எதிர்ப்பார்க்கிறார்” என்று கூறி வீடு வாடகைக்கு கிடையாது என மறுத்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்பதை அவர் பதிவு செய்துள்ளார். ஆனால், இது கடந்த ஏப்ரல் மாதம் நடந்ததாக தெரிகிறது. அதன் வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட் ஒன்று வைரல் ஆகவே அதற்கு அதற்கு அவர் கமெண்ட் செய்துள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்திருக்கும் சில நெட்டிசன்கள் தங்கள் அதிருப்தியை கேளிக்கையாக வெளிப்படுத்தினர். ஒருவர், “விரைவில் பெங்களூரில் வீடு வாடகை தேடுபவர்களுக்கு CAT, GMAT போன்ற நுழைவுத் தேர்வு இருக்கும். போக விரைவில் வாடகை தேடுபவர்களின் சமூக வலைதளம், கடன் மதிப்பீடுகள், அரசாங்க வலைதளங்களில் பதிவு செய்திருக்கும் விவரம் ஆகியவற்றையெல்லாம் மதிப்பீடு செய்து வாடகை வீடு வழங்க செயலி ஒன்றும் தொடங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவை வைத்து பார்த்தால், பெங்களூருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு, வேலைக்கு விண்ணப்பிப்பதை விட அதிக தயாரிப்பு தேவை என்பது போல் தெரிகிறது. உங்கள் சிவி கண்டிப்பாக கவரும் வகையில் இருக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் விட யாராவது நகரத்திற்கு செல்ல திட்டமிட்டால் உங்கள் மார்க் ஷீட் பிரகாசமாக இருக்க வேண்டும். இதற்கிடையில், கோவிட் -19 தொற்று தணிந்ததால் தொழில்நுட்ப வல்லுநர்கள் நகரத்திற்குத் திரும்பியுள்ளர். இதனால் வாடகை வீடுகள் மற்றும் தங்குமிடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி வீட்டு உரிமையாளர்கள் வாடகையை குறைந்தபட்சம் 25 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாடகை இன்னும் 7-12 சதவீதம் உயரும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கணித்துள்ளன.