’சந்திரயான் 2’, விண்வெளித் துறையில் பெரிய பாய்ச்சல் என்று பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய ’இஸ்ரோ’, சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. அதில் இருந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டு அறைக்கு, லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து சுற்று வட்டப்பாதையில் இருந்த ஆர்பிட்டர், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா உட்பட பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி, கிண்டல் செய்து ட்வீட்டரில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘’இந்தியா மற்றும் இஸ்ரோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிக்கு பாராட்டுகள். ’சந்திரயான் 2’, நிலவு ஆராய்ச்சியில் தெற்காசியாவில் மட்டுமல்லாமல், விண்வெளி துறையில் பெரிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. தெற்காசியாவில், விண்வெளித்துறையில் பிராந்திய முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. விண்வெளி ஆய்வை எந்த நாடு வழி நடத்துகிறது என்பது முக்கியமல்ல. பூமியின் அரசியல் எல்லைகள் நம்மை பிரித்தாலும், விண்வெளி நம்மை இணைக்கிறது’ என்றார்.