செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவையான பிராணவாயு
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான பிராணவாயு இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமியை போன்று பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்த ஆய்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூமியும் செவ்வாயும் சில பண்புகளில் ஒத்துள்ளதால் செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனைதொடர்ந்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் உள்ள பனிப்படலத்துக்குக் கீழே நீர் ஏரி இருப்பதாகத் கண்டுபிடித்தது. இந்த ஏரி சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கிறது என முடிவு செய்தனர். மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் கதிர்வீச்சு அதிகம் இருப்பதால், அங்கு உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை என்றும் ஆய்வாளர்கள் ஏற்கெனவே முடிவுக்கு வந்திருந்தார்கள்.
இதனையடுத்து செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்களும் உறுதி செய்திருந்தன. இந்நிலையில் தற்போது உயிர்கள் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமான பிராணவாயு அங்கிருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீரில் அதிக அளவு உப்பு இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தவிர செவ்வாய் கிரகத்தில் ஒரு செல் உயிரினங்கள் வாழ்ந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுப்பிடிக்கபட்ட நிலையில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதே ஆய்வாளர்களின் தற்போதையத் தேடலாக உள்ளது. அதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.