ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் 2 பி-யை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வரும் 22-ஆம் தேதி காலை 5.27 மணிக்கு அந்த ராக்கெட்டை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்திருப்பதாகவும், அதற்கான கவுண்ட்டவுன் 21 ஆம் தேதி தொடங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன பயன் ?
இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்கும் பணிகளில் அந்த செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட உள்ளது. ரிசாட் 2-பி செயற்கைக்கோளில் உயர்தொழில்நுட்பத்திலான அதி நவீன இமேஜிங் சாதனம் உள்ளது. அதன் வாயிலாக, புவியின் கீழ்ப்பரப்பில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 555 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை பொதுமக்கள் நேரடியாக காணும் வசதி அண்மையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக திறந்தவெளி அரங்கு ஒன்றும் கட்டப்பட்டது.
சுமார் 5 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அந்த அரங்கில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. பொது மக்கள் https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.