ஒரே நாளில் ஆர்டர் செய்து அதே நாளில் டெலிவரியும் பெறப்படும் அதிகவேக முறையானது வழக்கமாகி வரும் உலகில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் நான்கு ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு தன்னுடைய ஆன்லைன் ஆர்டரைப் பெற்றதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு சீன செயலிகள் பல இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. சீனாவைச் சேர்ந்த AliExpress எனப்படும் ஆன்லைன் செயலியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், சில காலத்திற்கு முன்பு வரை, இது இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான ஒரு வலைதளமாக அது இருந்துவந்தது. பிரபலமான ஆன்லைன் சந்தையாக இருந்து வந்த இந்த தளமானது, மலிவான விலையில் மின்னணு பொருட்களை விற்பனை செய்தது. இந்தியாவில் கிடைக்காத சில டெக் பொருட்களை கூட AliExpress மூலம் சீனாவிலிருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த நிதின் அகர்வால் என்பவர், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு AliExpress இணையதளத்தில் ஆர்டர் செய்த ஒரு பொருளை தற்போது டெலிவரி பெற்றுள்ளார். இதை அவர் ஆர்டர் செய்தது கோவிட்-க்கு முந்தைய காலகட்டம். தனக்குக் கிடைக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், நான்கு வருடங்கள் கடந்து தற்போது அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “நான் இதை AliExpress தளத்தில் 2019-ல் ஆர்டர் செய்தேன். ஆனால் பார்சல் இன்று டெலிவரி செய்யப்பட்டது. எனவே நம்பிக்கையை இழக்காதீர்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் AliExpress செயலியானது தற்போது இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கும் ஒருவர், “உங்களுக்கு Aliexpress ஞாபகம் இருக்கிறதா? டெலிவரி எப்பொழுதும் திரும்ப அனுப்பப்பட்டாலோ அல்லது மிஸ் ஆனாலோ பணம் திரும்ப வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் ஒருவர், “நான் 2018-ல் AliExpressலிருந்து ஆர்டர் செய்திருந்தேன், அது இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை. ஒருவேளை நானும் அந்த அதிர்ஷ்டசாலியா என்று பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.