பிரபல சீன நிறுவனமான ஒன் பிளஸ் பயனர்களின் மின்னஞ்சல் தகவல்களை கசியவிட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு நிறுவனம் ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபோன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் தங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றன.
வாடிக்கையாளர்களும் தங்கள் தேவைக்கேற்ப ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வாங்குகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ஒன்ப்ளஸ் 5T ஸ்மார்ட்ஃபோன் 1.68 w/kg என்ற அளவில் கதிர்வீச்சு வெளியிடுகிறது என சர்ச்சை எழுந்தது. ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சமீபத்திய வரவான 6T ஸ்மார்ட்ஃபோனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதன் கதிர்வீச்சின் அளவு 1.55 w/kg.
குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது ஒன் பிளஸ். பெண்களும் அதிகளவு இந்த செல்போனை உபயோகப்படுத்தவே விரும்புகின்றனர். இனி வாங்கினால் ஒன்பிளஸ் செல்போன் தான் வாங்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சில பேரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த செல்போனில் ஷார்ட் ஆன் ஒன்பிளஸ் என்ற செயலி டீஃபால்ட்டாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். செல்போன் வாங்கியதும் அந்த செயலியில் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும். இந்நிலையில், பயனர்களின் மின்னஞ்சல் தகவல்களை கசியவிட்ட சர்ச்சையில் ஒன்பிளஸ் சிக்கியுள்ளது.
ஷார்ட் ஆன் ஒன்பிளஸ் செயலியில் செல்போனில் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். அப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் சர்வதேச அளவில் வால்பேப்பராக வெளியிடப்படும். அதனை மற்ற நாடுகளில் உள்ள ஒன் பிளஸ் பயனர்களாலும் பார்க்க முடியும்.
இந்நிலையில் ஒன் பிளஸ் சர்வர் மற்றும் ஷார்ட் ஆன் ஒன் பிளஸ் செயலிகளுக்கு இடையேயான லிங்க் மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி கசிந்தது கண்டறியப்பட்டது. இதனால் பயனர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.