நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter Camera), சந்திரனில் தரையிறங்கிய ஒடிசியஸ் லேண்டரை (Odysseus Lander) சுமார் 56 மைல் (90 கிமீ) உயரத்தில் இருந்து படம்பிடித்து அனுப்பியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இண்ட்யூட்டிவ் மிஷின்ஸ் (Intuitive Machine) என்ற தனியார் நிறுவனம் ஒன்று நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவுடன் இணைந்து IM-1 என்ற விண்கலத்தை உருவாக்கியது.
இந்த விண்கலம் கடந்த பிப்ரவரி 15ம் தேதி புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால்கன் 9 ராக்கெட் (Falcon 9) மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
விஞ்ஞானிகளின் திட்டப்படி, IM-1 ல் விண்கலம் ஒடிஸியஸ் என்ற லேண்டர் உதவியுடன், பிப்ரவரி 23 ம் தேதி சந்திரனில் தரையிறங்கியது.
நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. பதற்றமான நிமிடங்களுக்கு பின், நிலவில் இருந்து முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பி வைத்தது ஒடிஸியஸ் லேண்டர். அதன்பிறகு விஞ்ஞானிகள் உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
1972ல் நாசாவின் விண்கலமான அப்பல்லோ விண்கலத்திற்கு பிறகு சந்திரனில் தரையிறங்கிய பெருமை IM-1-க்கு கிடைத்தது.
இந்நிலையில், லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரின் (Lunar Reconnaissance Orbiter), நிலவில் தரையிறங்கிய IM-1 விண்கலத்தை புகைப்படம் எடுத்துள்ளது. அதை நாசா நேற்று வெளியிட்டுள்ளது.
இன்றுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் விண்கலங்கள் நிலவில் வெற்றிகரமாக மென்மையான தரையிறக்கத்தை நிறைவேற்றியுள்ளன.