ஒன்பிளஸ் நிறுவனத்துடன் அல்ல! ஆப்பிளோடு போட்டி போடப்போகிறோம்! என்று அறைகூவல் விடுத்து அடுத்த ஸ்மார்போன் வெளியீடு பற்றி அறிவித்து இருக்கிறார் நத்திங் நிறுவனர் கார்ல் பெய்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான கார்ல் பெய் கடந்த 2020-ம் ஆண்டு அந்நிறுவனத்தில் இருந்து விலகி நத்திங் ( Nothing ) என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, முதலாவதாக Nothing ear (1) என்ற இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியது நத்திங். இந்நிலையில் நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக அறிவித்திருக்கிறார் கார்ல் பெய்.
ஒன்பிளஸ் நிறுவனத்தில் கார்ல் பெய் பணியாற்றிய போது ஸ்மார்ட்போன்கள் உருவாக்கத்தில் இவரின் பங்களிப்பும் அதிகமாக இருந்தது. எனவே நத்திங்-கின் முதல் ஸ்மார்ட்போன் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. அதற்கேற்றப்படியே அறிவிப்பு நிகழ்வில் கார்ல் பெய் தெரிவித்த கருத்துகள் டெக் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. தற்போதைக்கு Nothing Phone (1) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் பயன்படுத்தப்பட உள்ளது. மென்பொருள் மற்றும் போனின் வடிவமைப்பும் எளிமையாக இருக்கும். மூன்று வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்டும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்டும் கொடுக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் கார்ல் பெய்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ்ஸுடன் போட்டியிடப்போவதில்லை ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடும் என்றும் கூறியிருக்கிறார் கார்ல் பெய். Nothing ear (1) இயர்பட்-டில் புதிதாக ட்ரான்ஸ்பரன்ட் வடிவமைப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் இந்த ஸ்மார்ட்போனிலும் பின்பக்கமாக ட்ரான்ஸ்பரன்ட் கிளாஸ் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வருடத்தின் கோடைக் காலத்தின் போது ( அடுத்த 4 மாதங்களுக்குள்ளாக) Nothing Phone (1) இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
- ராஜேஷ் முருகன்