டெக்
'எச்.ஐ.வி. ஆய்வின் போது நேர்ந்த தவறினால் கொரோனா உருவாகியிருக்கலாம்' - நோபல் பரிசு விஞ்ஞானி
'எச்.ஐ.வி. ஆய்வின் போது நேர்ந்த தவறினால் கொரோனா உருவாகியிருக்கலாம்' - நோபல் பரிசு விஞ்ஞானி
கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டதுதான் என மருத்துவத்துறையில் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கூறியுள்ளார். பிரான்ஸ் விஞ்ஞானி எவ்வித ஆதாரமும் இன்றி இந்தக் கருத்தைக் கூறியிருப்பதாக இந்திய விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மனிதக் குலத்திற்கே அச்சுறுத்தலாகியுள்ள கொரோனா வைரஸை ஆய்வகத்தில் உருவாக்கித் திட்டமிட்டே சீனா பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதனைச் சீனா மறுத்து வந்த நிலையில், எய்ட்ஸுக்கான மருந்து கண்டறியும் போது, ஏற்பட்ட விபத்தில் கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி லுக் மோன்டாங்னியர் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி.யை கண்டறிந்ததற்காக லுக் மோன்டாங்னியருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொரோனா வைரஸை ஆராயும் போது, அதில் எச்.ஐ.வி.யின் தன்மை இருப்பதாகவும், மலேரியா கிருமியின் தாக்கம் இருப்பதாகவும் மோன்டாங்னியர் கூறியுள்ளார். மோன்டாங்னியரின் கூற்றுப்படி எச்.ஐ.வி வைரஸின் தோலும்,கோவிட் 19 வைரஸின் தோலும் ஒரே தன்மையில் இருப்பதால் மட்டுமே அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது எனக் கூற முடியாது என்கிறார் முதுநிலை விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்.
கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவானதற்கான ஆதாரம் இல்லை என லுக் மோன்டாங்னியரின் சக விஞ்ஞானிகள் கூறியிருப்பதையும் டி.வி.வெங்கடேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன் பல கொரோனா வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கியுள்ளதால், கோவிட் 19 வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற கூற்றை உறுதியாக ஏற்கும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.