இந்தக் கட்டுரையை நீங்கள் மொபைலில் படிக்க காரணமானவர் மறைவு..!

தனது சிறுவயதில் கற்றல் குறைபாடுடன் அவதிப்பட்டதால் பள்ளியில் பின் தங்கிய மாணவராகவே குட்எனஃப் அறியப்பட்டார்.
Dr John Goodenough
Dr John GoodenoughTwitter
Published on

இன்றைய உலகில் நாம் ஒவ்வொருவரும் பெரிதும் நம்பியிருக்கும் சாதனம் ஸ்மார்ட் போன்கள்தாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வேறுபாடின்றி அனைவரும் நம்பியிருக்கும் பெரும் சாதனம் செல்போன்கள். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் ஒருவரை கேலி செய்ய பேருந்து வசதி இல்லாத ஊரில் இருந்து வந்தவர் என்று பேசிய நிலை சென்று நெட்வொர்க் கிடைக்காத ஊரில் இருந்து வந்தவர் என கூறும் அளவு செல்போன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

mobile battery charging
mobile battery charging

செல்போன்கள் இவ்வளவு பரவலாக காரணம் அதில் உள்ள இணைய வசதிகள் முக்கிய காரணம் என்றாலும் ரீசார்ஜ் வசதி படைத்த மின்கலன்களைக் கொண்டது என்பதும் மிக முக்கிய காரணம் என்பதை மறுத்துவிடமுடியாது. யோசித்து பாருங்கள், ஆற்றல் உள்ளவரை மின்கலத்தை உபயோகப்படுத்திவிட்டு ஆற்றல் தீர்ந்த பின் வேறொரு புதிய மின்கலன்கள் மாற்ற வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும். இப்படி தொலைபேசிகளில் இருந்து செல்போன்களாக உருமாறவும், செல்போன்கள் அனைவரது கைகளில் புழங்கவும் மிக முக்கிய காரணமாக இருந்தவர் டாக்டர். ஜான் பி.குட்எனஃப். உலகிலேயே அதிக வயதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எனும் பெருமையை பெற்றவர். அமெரிக்க நாளிதழ் ஒன்றின் தகவலின் படி ஜான் பி.குட்எஃப் தனது 100வது வயதில் அமெரிக்க டெக்சாஸில் உள்ள ஆஸ்டின் நகரில் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார்.

1980-ம் ஆண்டிலேயே லித்தியம் அயன் பேட்டரிக்கு விதை போட்ட குட்எனஃப்!

1980-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது குட்எனஃப் தனது ஆராய்ச்சி வாழ்க்கையில் மிக முக்கிய ஒன்றை கண்டடைந்தார். பிரிட்டிஷ் வேதியியலாளரான விட்டிங்காம் வடிவமைத்த மின்கலத்தை மேம்படுத்தி டாக்டர். குட்எனஃப் லித்தியம் - கோபால்ட் - ஆக்ஸைட் கேத்தோடு உடன் கூடிய மேம்பட்ட மின்கலத்தை வடிவமைத்தார். அவர் உருவாக்கிய மின்கலம் ஆற்றலை சேமித்து வைக்கும் திறன் மற்றும் உபயோகிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதால் அந்த மின்கலம் மடிக்கணினி போன்ற பல்வேறு சாதனங்களில் இன்று உயிர்நாடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மின்கலம் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதற்கு காப்புரிமை தர மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dr John Goodenough
Dr John GoodenoughTwitter

குட்எனஃப் கண்டுபிடிப்பு நவீன தொழில்நுட்ப உலகில் குறிப்பிடத்தகுந்த புரட்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் தனது கண்டுபிடிப்புகளுக்கான ராயல்டி எனப்படும் உரிமைத்தொகையை பெற்றதில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் பேட்டரியின் திறனை அறிந்தே வைத்திருந்தன. மேலும் மின்கலத்தின் செயல்திறனை மேம்படுத்த தொடர்ச்சியாக முயற்சித்தே வந்துள்ளனர். அவர்களின் தொடர் முயற்சியின் விளைவாக பேட்டரிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரித்தனர்.

முதல் பாதுகாப்பான ரீச்சார்ஜபில் மின்கலம் வடிவமைத்து 97 வயதில் நோபல் பரிசு!

1991 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் குட்எனஃப் உடன் இணைந்து உலகின் முதல் பாதுகாப்பான ரீச்சார்ஜபில் மின்கலத்தை வடிவமைத்து சந்தைப் படுத்தியது. இதன் காரணமாக 2019 ஆம் ஆண்டு குட்எனஃப் தனது 97ஆவது வயதில் நோபள் பரிசை பெற்றார். இந்த விருதினை அவர் தனது ஆராய்ச்சியின் போது உதவிய இரண்டு ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். உலகில் அதிக வயதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்ற சாதனையையும் அவர் இதன் மூலம் பெற்றார்.

2019 Nobel Prize in chemistry
2019 Nobel Prize in chemistry

தனது இறுதி காலத்திலும் குட் எனஃப் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் காற்று, சூரிய சக்தி, அனுசக்தி போன்றவற்றில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமித்து கொண்டு செல்லும் திறன் கொண்ட சூப்பர் பேட்டரிகளை தயாரிப்பதில் தனது கவனத்தை செலுத்தினார். வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ள விரைவான ரீசார்ஜ் திறன்களுடன் கூடிய எலக்ட்ரிகல் வாகனங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தார்.

கற்றல் குறைபாடுடன் பிறந்து உலகின் அனைத்து மூலையிலும் புகழ் பெற்றவர்!

பல்வேறு மரியாதைகளை உலகின் பல நாடுகளில் இருந்து பெற்றுள்ள குட்எனஃப் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி கோப்லி விருதினையும் பெற்றுள்ளார். குட்எனஃப் மாணவர்களில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த IIT-BHU இன் பேராசிரியர் ப்ரீதம் சிங் அவரை "ஒரு சிறந்த ஆன்மா, மிகவும் மனிதநேயம் கொண்டவர், விவாதம், ஆலோசனை மற்றும் உதவிக்கு எவருக்கும் அவரது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்" என்று நினைவு கூர்ந்துள்ளார்.

1922 ஜூலை 25 ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள ஜெனா எனும் இடத்தில் பிறந்த குட்எனஃப் தனது சிறுவயதில் கற்றல் குறைபாடுடன் அவதிப்பட்டார். இக்காரணத்தால் பள்ளியில் பின் தங்கிய மாணவராகவே குட்எனஃப் அறியப்பட்டார். ஆனால் கணிதம் மற்றும் மொழிப்பாடங்களில் சிறந்த மாணவராக தனது டீனேஜ் வயதுகளில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். லத்தீன் மற்றும் கிரேக்க மொழிப் பாடங்களில் சிறந்த மாணவராகவும் விளங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com