தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தினை நெதர்லாந்து ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
வைஃபை எனப்படும் கம்பியில்லா இணைப்பு வசதியில் உள்ள வேகக் குறைபாடுகளைப் போக்கும்வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வினை மேற்கொண்டனர். அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியும் என்று அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வைஃபை இணைப்பில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரானிக் சாதனங்கள் இணைக்கப்படும்போது, வேகம் குறைவதை இதன் மூலம் தவிர்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வைஃபை இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்யேக ஒளிக்கற்றை மூலம் இணைப்பு பெறப்படும் என்பதால், வேகம் குறைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.