அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது.
இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அவர்களை மீட்டுவர விண்கலம் இன்று இரவு புறப்பட இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் க்ரூ - 9 எனப்படும் திட்டத்தின்படி 2 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளனர்.
இந்த விண்கலம் ஃப்ளோரிடாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி இன்று இரவு 10.47 மணிக்கு விண்கலம் ஏவப்படுகிறது. இந்த விண்கலத்தில் நாசாவை சேர்ந்த வீரர் நிக் ஹாக்வே மற்றும் ரஷ்ய வீரர் அலெக்ஸாண்டர் கோர்பனோவ் ஆகியோர் பயணிக்க உள்ளனர்.
இவர்கள் ஐந்து மாதங்கள் ஆராய்ச்சிப் பணிக்காக விண்வெளியில் தங்கியிருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர உள்ளனர். புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 26 இந்த விண்கலம் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால், புளோரிடாவில் ஏற்பட்ட ஹெலினே புயல் பாதிப்பால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.