பூமியில் இருந்து மனிதன் அனுப்பிய எந்தவொரு பொருளும் இதுவரை நிலவைத் தவிர வேறொரு கோளுக்கு சென்றுவிட்டுத் திரும்பியதில்லை. டீப் ஸ்பேஸ் (Deep Space) எனப்படும் விண்வெளியின் நெடுந்தொலைவுக்குப் பயணம் செய்து திரும்புவது இப்போதிருக்கும் விண்கலங்களால் சாத்தியமில்லை. இதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பும், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் விண்கலம் ஓரியான். பூமியில் இருந்து நாம் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய நட்சத்திரத்தொகுதியின் பெயர்தான் இது.
பூமியின் தாழ்நிலை வட்டப்பாதையைத் தாண்டி, மனிதர்களையும் பொருள்களையும் கொண்டு செல்வது இதன் பணி. பூமியைத் தாண்டி மனிதர்களை அனுப்பும் பல திட்டங்களைத் தொடங்கிவிட்டு பின்னர் ரத்து செய்த அமெரிக்கா இந்தத் திட்டத்தை எப்படியும் நடைமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. 2004-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், வேறொரு உலகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதே இதன் முதல் நோக்கம் என்றார்.
கொலம்பியா விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தும் இத்தகையதொரு விண்கலத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதற்குக் காரணமாக அமைந்தது. ஓரியான் விண்கலத்தின் மொத்த எடை 25 ஆயிரம் கிலோ. 4 முதல் 6 பேரை ஏற்றிச் செல்லக்கூடியது. இந்த விண்கலத்தி்ன் மூலம் 2020 ம் ஆண்டுக்குள் நிலவுக்கும் பின்னர் செவ்வாய்க்கும் விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. விண்கற்கள் மற்றும் சிறுகோள்களில் மனிதர்கள் தங்கி ஆய்வு செய்யவும் இந்த விண்கலம் உதவும்.
வடிவமைப்பைப் பொருத்தவரை,1972-ம் ஆண்டில் பயன்பட்ட அப்போலோ 16 விண்கலத்துக்கு மாற்றாகவே இந்த விண்கலம் பார்க்கப்படுகிறது. இதை விண்ணில் செலுத்துவதற்கு அதிகத் திறன் கொண்ட எஸ்எல்எஸ் (SLS) என்ற புதியவகை ராக்கெட்டையும் அமெரிக்கா சோதனை செய்து வருகிறது. முதல்கட்டமாக வரும் டிசம்பர் மாதத்தில் ஓரியான் விண்கலம் சோதனை அடிப்படையில் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த விண்கலத்தின் மிக முக்கியமான அம்சமாக, பூமிக்குத் திரும்பபும்போதும் பயன்படும் தொழில்நுட்பத்தைக் கருதலாம். ஓரியான் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் இருக்கும் பகுதி பூமிக்குத் திரும்பும்போது, பாரசூட் மூலம் கடலில் விழும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு கடற்படை வீரர்கள் மூலமாக விண்கலம் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்படும். இது மிகவும் பாதுகாப்பான தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்காக சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டிருப்பதன் மூலம், புதியதோர் உலகை அடைய வேண்டும் என்ற கனவை நோக்கி மற்றொரு அடியை அமெரிக்கா எடுத்து வைத்திருக்கிறது.