அமெரிக்காவின் ஜூனோ செயற்கைக்கோள் வியாழன் கோளில் உள்ள கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படும், மிகப் பெரிய 16,000 கிலோமீட்டர் செந்நிறப் பகுதிக்கு அருகே பறக்க இருக்கிறது.
சூரிய மண்டலத்தில் 5வது கோளாக உள்ள வியாழன் மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது ஆகும். இந்தக் கோளை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்டுள்ள ஜூனோ விண்கலம் அரிய புகைப்படங்களை எடுத்து தொடர்ந்து அனுப்பி வந்தது. இதுவரை வெளியான புகைப்படங்களில் வியாழனில் பெரிய அளவிலான சிவப்பு நிறப்பகுதிகள் (வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகள்) நிறைந்த படங்களே அதிகமாக இருந்தன.
சுமார் இருநூறு ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த செந்நிறப் பரப்பின் மீது ஒரு விண்கலம் நெருக்கமாகப் பறப்பது இதுவே முதல் முறையாகும். ஜூலை 10 ஆம் தேதி வியாழன் கோளை ஜூனோ நெருங்குகிறது. இதன் மூலம் வியாழன் கோள் எப்படிச் செயல்படுகிறது, செந்நிறப் பகுதி எப்படி உருவானது என்பது குறித்த ஆழமான புரிதல் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.