மோட்டோ ஜி6 ப்ளஸின் சிறப்பம்சங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன.
மோட்டோரோலா மொபைல் நிறுவனம் ‘ஜி’ மாடல் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக மோட்டோரோலா நிறுவனம், அடுத்தடுத்த புதிய வகையிலான செல்போன் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மோட்டோ 5 எஸ் ப்ளஸ் மாடல் செல்போன் வரை அனைத்து மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தனது அடுத்த மாடலான ஜி6 மாடலை மோட்டோரோலா தயாரித்துள்ளது. இந்த மாடல் மூன்று ரகங்களில் வெளிவரவுள்ளது. அவை மோட்டோ ஜி6 ப்ளஸ், மோட்டோ ஜி6 ப்ளே, மோட்டோ ஜி6.
இதில் மோட்டோ ஜி6 ப்ளே மற்றும் மோட்டோ ஜி6 ஆகியவை 5.7 இன்ச் திரை, 3 ஜிபி, 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோவுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளிவரவுள்ளன. ஜி6 ப்ளஸை பொருத்தவரை, ஜி5எஸ் ப்ளஸ்-க்கு அடுத்த கட்டமாக 6 ஜிபி ரேம், 3300 எம்ஏஎச் பேட்டரி திறன் மற்றும் 5.93 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகவுள்ளது. இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் கசியாமல் மோட்டோரோலா நிறுவனம் ரகசியம் காத்து வருகிறது.