நோய்களை விரைவாகவே கண்டறிந்தால் அதிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம், அனைவரும் நோய் தொற்றுதலிருந்து எப்படி, எந்தளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாய் அமைந்துள்ளது இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம்.
இங்கிலாந்து கென்ட் கில்லிங்ஹாம் பகுதியை சேர்ந்த சாரா ஹெட்ஜஸ் என்ற 40 வயது பெண், தன்னுடைய குழந்தைகளுக்காக இரவு உணவை சமைத்துக் கொண்டிருக்கும் போது, விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய 4வது குழந்தையான 3 மாத ஆண் குழந்தை தாமஸின் கண்களில் ஏதோ வெள்ளையாக மிளிர்வதை கண்டுள்ளார். குழந்தையின் கண்ணில் தெரிந்த ’வெள்ளை பளபளப்பு’ பூனையின் கண்கள் போன்று காட்சியளித்துள்ளது.
முதலில் அது ஏதோ வெளிச்சத்தால் ஏற்பட்டுள்ள ஒளி எதிரொளிப்பு என்று சாதாரணமாக விட்டுவிட்ட சாராவிற்கு, அந்த கண்களின் வெள்ளை பளபளப்பு ஏனோ மனதிற்குள் உருத்திக் கொண்டே இருந்துள்ளது. அதனால் குழந்தையின் கண்களை சாதாரண மொபைல் கேமாராவுடன் எடுத்த சாரா, ஃபிளாஸ் லைட்டை பயன்படுத்தி கண்களை புகைப்படம் எடுத்து இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துள்ளார். இரண்டிற்கும் ஏதோ சிறிய வேறுபாடு தெரிய, ஒருவேளை இதுவும் ஒளி பிரதிபலிப்பாக இருக்குமோ என நினைத்த சாரா, குழந்தையை அறையின் வெவ்வேறு இடத்திற்கு நகர்த்தி Flash Light பயன்படுத்தி புகைப்படங்களை எடுத்து பார்த்துள்ளார்.
பின்னர் எடுத்த புகைப்படங்களை கூகுளில் பதிவேற்றி தேடுதலை நிகழ்த்திய சாராவுக்கு, புற்றுநோயின் அறிகுறிகள் என்ற அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது. இது சிறுவயது குழந்தைகளுக்கு ஏற்படும் ரெட்டினோபிளாஸ்டோமா எனப்படும் அரியவகை கண் புற்றுநோய் என்று தெரியவந்துள்ளது. உடனடியாக மருத்துவருக்கு எடுத்துச்சென்ற சாரா தன்னுடைய மகனை நினைத்து அதிகமாக பயந்துள்ளார்.
தான் எடுத்த புகைப்படங்களோடு மருத்துவரை பார்க்க சென்ற சாரா கூகுளில் தான் தெரிந்தவற்றை பகிர்ந்ததோடு புகைப்படங்களை மருத்துவரிடம் காட்டியுள்ளார். முதலில் டாக்டரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தாமஸின் கண்ணில் வெள்ளையாக படித்திருந்த புகைப்படத்தை பார்த்த பிறகு மெட்வே மருத்துவமனைக்கு டெஸ்ட்டுக்கு பரிந்துரை செய்துள்ளார். அங்கு குழந்தைக்கு ரெட்டினோபிளாஸ்டோமா எனப்படும் அரியவகை கண் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய மகனின் நிலை குறித்து பேசியிருக்கும் சாரா, "முதலில் நான் இதை தெரிந்துகொண்ட போது என் மகன் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன். நான் அவனை இழக்கப் போகிறேன் என்று பயந்தேன், புற்றுநோய் என்ற வார்த்தையை நீங்கள் கேட்கும் போது நீங்கள் தானாகவே வாழ்வின் அழிவு என்று நினைக்கிறீர்கள். நான் உண்மையில் இது எல்லாம் பொய்யாக இருக்க கூடாதா, யாராவது என்னிடம் வந்து இது கனவு தான் என்று சொல்லிவிட கூடாதா என்று நினைத்தேன். ஆனால் அது புற்றுநோய் தான் என்று உறுதிசெய்யப்பட்ட போது என் உலகம் சிதைந்தது, நான் அதிகமாக அழ ஆரம்பித்தேன்” என்று கூறியதாக மிர்ரர் மேற்கோள் காட்டியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்நிகழ்வு நடந்துள்ளது, தாமஸிற்கு விரைவாகவே அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு தொடர்ச்சியாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 முறை கீமோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தன்னுடைய கடைசி சிகிச்சையை தாமஸ் பெற்றுள்ளான். தற்போது அவனுடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாமஸ் குறித்தும் அரியவகை புற்றுநோய் குறித்தும் பேசியிருக்கும் டாக்டர் ஒருவர், “ரெட்டினோபிளாஸ்டோமா என்ற அரியவகை கண் புற்றுநோயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானதாக இருக்கும், குழந்தைகள் எப்போதும் போல நன்றாகவே தோன்றுவார்கள், இது நோயறிதலை மிகவும் கடினமாக்குகிறது. அரிதாக பாதிக்கப்படும் இதுபோன்ற நோய்பாதிப்புகளில் பொதுவாக குழந்தைகளுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக கண் அகற்றப்பட வேண்டியிருக்கும். ஆனால் தாமஸின் விஷயத்தில், அவரது அறிகுறிகள் விரைவாகவே அடையாளம் காணப்பட்டதால், அவர் சிகிச்சை பெறுவதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளதாக மிர்ரர் கூறியுள்ளது.
இந்நோய் குறித்து குழந்தை பருவ கண் புற்றுநோய் அறக்கட்டளை (CHECT) தெரிவித்திருக்கும் தகவலின் படி, ரெட்டினோபிளாஸ்டோமாவின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் கண்ணில் தோன்றும் வெள்ளை பளபளப்பை வைத்து மட்டுமே கண்டறிய முடியும், அதையும் நீங்கள் ஏதாவது வெளிச்சத்தில் அல்லது கண் சிமிட்டும் போது மட்டுமே பார்க்கமுடியும். அதேபோல் கண்ணில் எப்போதாவது ஏற்படும் வீக்கம் மட்டுமே ஒரேயொரு அறிகுறியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
சிகிச்சைக்கு பிறகான மகன் தாமஸ் குறித்து பேசியிருக்கும் தாய் சாரா, “தாமஸ் மிகவும் மகிழ்ச்சியான சிறு பையன். அவன் தன் மூத்த சகோதரனுடன் முரட்டுத்தனமாக விளையாடுவதையும், தரையில் விழுவதையும் விரும்புகிறான்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உடன் குழந்தை பருவ புற்றுநோய் அறிகுறிகள் குறித்தும், விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவத்துவம் குறித்தும் சாரா பகிர்ந்து கொண்டுள்ளார்.
தாமஸின் இந்நிகழ்வு விரைவான நடவடிக்கை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையை முன்னெடுத்தால், புற்றுநோய் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.