மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம், ககன்யான். இத்திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டமானது இன்று (அக்டோபர் 21) நடைபெறும் என்று இஸ்ரோ தரப்பில் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இறுதிநேரத்தில் சோதனை ஓட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின் மீண்டும் விண்ணில் பாய்ந்தது.
ககன்யான் சோதனை வாகனம், டிவி-டி1 ராக்கெட் மூலம் இன்று காலை 8 மணி அளவில் முதல் ஏவுதளத்தில் இருந்து லிப்ட் - ஆஃப் செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது. வானிலை சரியில்லையெனக்கூறி அதை ஒத்திவைத்துக்கொண்டே இருந்தனர். இறுதியாக 8.45 ஆக நேரம் மாற்றப்பட்டது. ஆனால் ஏவுவதற்கு 5 விநாடிகளுக்கு முன்பு கவுண்ட்டவுனானது நிறுத்தப்பட்டது. ககன்யான் திட்டம் என்பது இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். இதற்கு தேவையான அனைத்துகட்ட பணிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அப்படியிருக்க, 5 விநாடிகளுக்கு முன் இது நிறுத்தப்பட என்ன காரணம்?
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில் “இஞ்சின் பற்றவைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன தவறு நடந்தது என்று கண்டறிய வேண்டும். சோதனை வாகனம் தற்போது பாதுகாப்பாக உள்ளது.
என்ன கோளாறு என்று விசாரணை செய்த பிறகு இதற்கான காராணத்தை நாங்கள் அறிவிப்போம். சோதனை வேறு எந்த தேதியில் நடக்கும் என்றும் பின்னர் தெரிவிப்போம்” என்று தெரிவித்தார். அவர் சொல்லி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ராக்கெட்.
இந்த சோதனை ஓட்டத்தின் நோக்கம் - 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 3 நாட்களுக்கு ககன்யான் மாதிரி விண்கலம் அனுப்பி வைக்கப்படுவதும், பின் பாதுகாப்பாக அது பூமிக்கு திரும்புவதுமே இதன் முக்கிய நோக்கம்.
இதன் பிறகு ரோபோவை ஏற்றிச் செல்லும் மற்றொரு சோதனையும் இறுதியில் மனிதர்களை கொண்டு செல்லும் பயணமும் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. `