மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவுக்கு நடப்பாண்டில் 665 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 63 விழுக்காடு அதிகமாகும். இதில் பெரும்பகுதி பங்குகளாக வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக சைபர் செக்யூரிட்டி பிரச்னை ஏற்பட்டது. ப்ளூ ஸ்க்ரீன் ஆஃப் டெத் என்ற இந்த பிரச்னையால் உலகமே ஸ்தம்பித்தது. சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட் தளங்கள் முடங்கின. இந்தப் பிரச்னை காரணமாக, தனது ஊதியத்தை குறைத்து வழங்குபடி சத்யநாதெல்லா கேட்டுக்கொண்டார்.
ஆனால், நடந்தது வேறு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவருக்கு 63 விழுக்காடு அதிகமாகவே ஊதியத்தை வழங்கியிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் தொடர்பாக முக்கிய முன்னெடுப்புகளை சத்ய நாதெல்லா மேற்கொண்டார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, 2022ஆம் ஆண்டில் 68 பில்லியன் டாலர் மதிப்பில் அக்டிவிஷன் பிலிஷார்டு நிறுவனத்தை கையகப்படுத்தியதற்காக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்திய வம்சாவளியான சத்ய நாதெல்லா, 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றது கவனிக்கதக்கது.