மக்கள் அன்றாடம் அதிகளவில் பயன்படுத்திவரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முதலிய 3 சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மை நடத்திவரும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தங்களுடைய வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை மற்ற மெட்டா ஆப்களுக்கும் பகிர்ந்து வணிக ஆதாய நோக்கத்தில் செயல்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்காக அந்நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையமானது (CCI) ரூ.213 கோடியை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விரைவில் தரவுகளை மற்ற ஆப்களுக்கு பகிரும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டுகளுடன் உடன்படவில்லை என்றும், போட்டி ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு வாட்ஸ்அப் தளமானது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை (Privacy policy) புதுப்பிக்கும் வகையில் ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்தியது. அந்த அப்டேட்டின் படி வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் தங்களின் தரவுப் பகிர்வு உள்ளிட்டவற்றிற்கு கட்டயாமாக அனுமதி கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டது. ஏற்கலாம் அல்லது விடுக்கலாம் என்று முன்னர் இருந்த இரண்டு ஆப்சன்களை நீக்கி கட்டாயம் ஏற்கவேண்டும் என்ற விதிமுறை அப்டேட் செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்படி சேகரிக்கப்பட்ட வாட்ஸ்அப் பயனாளர்களின் தரவுகளை மற்ற மெட்டா ஆப்களுக்கும் பகிர்ந்து, விளம்பர பகிர்வு உள்ளிட்ட வணிக ஆதாய நோக்கத்திற்கு செயல்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனத்தை இந்திய போட்டி ஆணையமான CCI குற்றஞ்சாட்டியுள்ளது. அதற்கு அபராதமாக ரூ.213 கோடியையும், 5 ஆண்டுகளுக்கு தரவு பகிர்வை கட்டாயம் நிறுத்தவேண்டும் என்ற அறிவிப்புகளையும் CCI அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிசிஐ அறிவித்திருத்திக்கும் உத்தரவின் படி, “மெட்டா குழுமமானது இந்தியாவில் ஆன்லைன் காட்சி விளம்பரங்களில், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய இடத்தைக் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டில் கொள்கை புதுப்பிப்பின் போது, வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் மெட்டாவுடன் தங்கள் தரவு பகிர்வை பகிர்ந்துகொள்வதை கட்டாயமாக்கியது.
இந்த தரவு பகிர்வு விதிமுறையானது போட்டிச் சட்டத்தின் கீழ் நியாயமற்றது என சிசிஐ கண்காணிப்புக் குழு முடிவு செய்தது. வாட்ஸ்அப் சேவையை வழங்குவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக மெட்டா நிறுவனங்களுக்கிடையில் வாட்ஸ்அப் பயனர்களின் தரவைப் பகிர்வது தவறு. அதனால், மெட்டா இந்த செயலை தொடர்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு அபராதமாக ரூ.213.14 கோடி விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
மேலும் மெட்டாவின் இத்தகைய செயலால் மற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய போட்டி ஆணையம் வைத்திருக்கும் இத்தகைய குற்றச்சாட்டுக்கு மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டுகளுடன் உடன்படவில்லை என்றும், போட்டி ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “வாட்ஸ்அப் மக்கள் மற்றும் வணிகங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு மதிப்புமிக்க ஒன்றாக இருக்கிறது. நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு COVID போன்ற நேரங்களில் மக்களிடம் சேவைகளை வழங்க உதவியது, மேலும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிறு வணிகங்களுக்கு ஆதரவளிக்கிறது.
கொள்கை புதுப்பிப்பானது விருப்பமான வணிக அம்சங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் மட்டுமே கொண்டுவரப்பட்டது என்றும், இந்த புதுப்பிப்பு தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாடு பற்றிய கூடுதல் வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.