விமர்சனங்களில் சிக்கிய ட்விட்டர்: மாஸ்டோடன் பக்கம் நகரும் இணையவாசிகள்!

விமர்சனங்களில் சிக்கிய ட்விட்டர்: மாஸ்டோடன் பக்கம் நகரும் இணையவாசிகள்!
விமர்சனங்களில் சிக்கிய ட்விட்டர்: மாஸ்டோடன் பக்கம் நகரும் இணையவாசிகள்!
Published on

சமூக வலைத்தளம் ஜாம்பவான்களாக இருந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை புறம் தள்ளிவிட்டு "Mastodon" தளத்தை நோக்கி சமூக வலைத்தளவாசிகள் நகர்ந்து வருகின்றனர். பயனர்களின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் சமூக வலைத்தளம் என்றவுடனே நினைவுக்கு வந்தது ஃபேஸ்புக்தான். அதன்பின் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து நெட்டிசன்கள் ட்விட்டர் தளத்தை நோக்கி நகர்ந்தனர். தற்போது 30 கோடி பயனர்களை தன்னகத்தே வைத்திருக்கும் ட்விட்டர் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு காட்டுவதாகவும், செல்வாக்குப் படைத்தவர்களுக்கே நீல நிற டிக் வழங்குவதாகவும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. இதற்குப் பதிலளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், கொள்கையில் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும், எந்தவொரு சித்தாந்த சார்பிலும் அரசியல் பார்வையிலும் செயல்படுவதில்லை என்றும் விளக்கம் அளித்தது.

இந்தச் சர்ச்சையால் அதிருப்தியடைந்த வலைத்தளவாசிகள், Mastodon என்ற சமூகவலைத்தள பக்கம் மீது பார்வையைத் திருப்பியுள்ளனர். Mastodon என்பது ட்விட்டர் போலவே தோற்றமுடைய ஒரு சமூக வலைத்தளமாகும். இது கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. Mastodon- இல் பயனர்கள் தகவல்களை எழுத்துகளாகவோ, படங்கள் மற்றும் வீடியாகவோ பதிவிடலாம், கருத்து தெரிவிக்கலாம், பிற பயனர்களைப் பின்தொடரலாம்.

ட்விட்டரின் லோகோவாக குருவி எப்படி இருக்கிறதோ அதேபோன்று, Mastodon பக்கத்தில் யானை லோகோவாக இருக்கிறது. இது ட்விட்டரைவிட மேம்பட்ட பாதுகாப்பு உடையது என்றும், Mastodon பக்கத்தில் யாரேனும் தவறு செய்வதாக புகார் எழுந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமின்றி Mastodon பயனர்களின் விவரங்கள் எந்த வகையிலும் கசிவதற்கோ, உளவுப் பார்ப்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ள அந்நிறுவனம், இந்தத் தளத்தில் எந்தவிதமான வணிகரீதியான விளம்பரங்களும் இடம்பெறாது என உறுதியளித்துள்ளது. இதுவரை Mastodon பக்கத்தில் சுமார் 22 லட்சம் பயனர்கள் உள்ளனர்.

ட்விட்டருக்கு மாற்றாக மாஸ்டோடன் அமைய வாய்ப்பிருப்பதாக பரவலாக கூறப்பட்டாலும், ட்விட்டரை போன்று மாஸ்டோடனை எளிதாக பயன்படுத்த முடியாது என்றும், அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com